பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மனைவிக்கே எத்தனை பேர்கள் கொடுத்து விடுகிறார்கள், காரணம் அவளால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவுதான். இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்க்கு இடாமல் தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும், வீடாக வைத்திருப்பவர்களும், மடந்தை யரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர்களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு திட்டமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரை யறையாவது உண்டா? 'நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு" என்கிறார் வள்ளுவர். திருமூலர் சொல்வது திருமூலர் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார். ஒரு செட்டியார், அவருக்கு நாக்குச் சுவை அதிகம். அதற்கு ஏற்றபடி அவருடைய மனைவியும் நன்றாகச் சமைத்துப் போடும் ஆற்றல் படைத்திருந்தாள். தினமும் அவரே பையை எடுத்துக் கொண்டு காய்கறிக் கடைக்குப் போய்ப் பிஞ்சுக் கத்தரிக்காய், பிஞ்சு வெண்டைக்காய் முதலியன வாங்கி வருவார். அவருக்குப் புடலங்காய் என்றால் உயிர். ஒருநாள் அவர் கடைக்குப்போய் இருந்தார். நல்ல பிஞ்சுப் புடலங்காய் கட்டுக் கட்டாக வந்திருந்தது. அவருக்கு நாக்கிலே நீர் சுரந்தது. உடனே இரண்டு புடலங்காயை வாங்கி ஒடித்துப் பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் கொடுத்து அடிசில் பண்ணச் சொன்னார். அந்த அம்மாளும் சுருள்சுருளாக நறுக்கிச் சுவைபடச் சமையல் பண்ணினாள். அதை நன்றாகச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டார் செட்டியார்; உள்ளே போய் இளைப்பாறினார். மனைவி வந்தவுடன், 'இன்றைக்கு நீ புடலங்காய்க் கறி பண்ணியிருந்தாயே, மிக அருமை, அருமை!' என்று மிகவும் இரகசியமாகப் பேசினார். அதற்குப் பின்பு, "என்னவோ இடப் பக்கமாக வலிக்கிறதே என்று சொல்லிப் படுத்தார். படுத்தவர் படுத்தவர்தாம்; எழுந்திருக்கவே இல்லை. 224