பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலங்கள் பெயர் என்பார்கள். அப்படியே இங்கே ஆலுக்கு என்றால் ஆல மரத்தடியில் இருக்கிற பெருமானுக்கு என்று பொருள். ஆலமரத்தடியில் அவர் தவம் செய்த காரணத்தால் ஆலமரத் திற்கே ஒரு பெருமை. பழுத்த ஆலமரம் எங்கே இருக் கிறதோ அங்கெல்லாம் பழுத்த அறிவு இருப்பதாக நினைத்தார்கள். விழுதுவிட்டுப் படர்ந்து வளர்ந்து முதிர்ந்த ஆலமரத்தைக் கண்டாலே நம் நாட்டவர்கள் கும்பிடுவார்கள். திருவாலங்காடு என்ற தலத்தில் ஆலமரமே தலவிருட்சம். அங்கேதான் காரைக் காலம்மையார் இறைவன் திருவருளைப் பெற்றார். ஆலடிக் கடவுள் முருகனுடைய அணிகலங்களைச் சொல்ல வருகிற அருண கிரியார் அவனுடைய தந்தையை நினைக்கிறார். அவருக்கு எத்தனையோ கோலங்கள் இருந்தும் ஆலமரத்தடியில் சின் முத்திரை காட்டிக் கொண்டு அப்பெருமான் உட்கார்ந்த கோலத்தை நினைப்பூட்டுகிறார். காரணம் என்ன? தட்சிணா மூர்த்தியாக அவர் மோன ஞானத்தவம் செய்த பிறகே பார்வதி கல்யாணம் நடந்தது; முருகவேள் திரு அவதாரம் செய்தான். கந்த புராணத் தின் ஆரம்பக் கதை தட்சிணாமூர்த்தியின் கதைதான். ஆகவே குமாரநாயகனின் தகப்பனாரைப் பற்றி நினைக்கும்போது குமாரனைத் தோற்றுவிப்பதற்காக அவர் மேற்கொண்ட தவக் கோலம் காட்சி தருகிறது. அவர் தியானிப்பது யாரை? சிவபெருமான் யாரை நினைந்து கல்லால மரத்தடியிலிருந்து தவம் செய்தார்? எல்லாரும் தம் தவம் நிறைவேறத் தம் உாசனா மூர்த்தியின் திருவுருவத்தை மனக்கிழியில் எழுதிக் கொள்வார்கள். எத்தனையோ தவமுனிவர்கள் சிவபெருமானைத் தங்கள் உள்ளக் கிழியில் எழுதிக் கொண்டு தவம் செய்கிறார்கள். அந்தச் சிவ பெருமான் யாரைத் தம்முடைய உள்ளக் கிழியில் எழுதிக் கொண்டு தவம் செய்தார்? குமரகுருபரர் இதை அழகாகச் சொல்கிறார். 'எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே." 291