பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஆட்டி வைக்காவிட்டால் அவற்றால் ஒரு வேலையும் செய்ய இயலாது. உடம்பிலுள்ள ஒவ்வோர் அங்கத்தையும் இயங்கச் செய்கிறது உயிர் என்பதை நன்கு உணர்கிறோம். உயிர் போய் விட்டால் உடம்புக்கு ஜடம் என்ற நிலை வந்துவிடுகிறது. உடம்பை இயக்குகிறது உயிர் என்பது நாம் தெரிந்துகொண்ட உண்மை. உடம்பில் உயிர் இருக்கிறது என்பது அநுமானப் பிரமாணம். உயிரை யாரும் கண்ணால் பார்த்தது இல்லை. அது பிறக்கும் போது கண்ணுக்குத் தெரியாது. இறக்கும்போதும் தெரிவது இல்லை. ஆனால் உடம்பு இயங்குவதைக் கொண்டு உயிர் இருக்கிறதென்று தெரிந்து கொள்கிறோம். புகையைக் கண்டு அங்கே நெருப்பு இருக்கிறதென்று ஊகிப்பது போல, உடம்பு செயற்படுவதைக் கொண்டு உயிர் இருக்கிறதென்று தெரிந்து கொள்கிறோம். இது அநுமானப் பிரமாணத்தினால் தெரிந்து கொள்கிற உண்மை. கைம்மாறு எது? உடம்பை இயக்குவது உயிர் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த நமக்கு உயிர்களை எல்லாம் இயக்குபவன் ஆண்டவன் என்ற அறிவும் வரவேண்டும். அதுவும் அநுமானந் தான். அப்படி அநுமானித்து எல்லாச் செயல்களுக்கும் காரண மானவன் இறைவன் என்று தெரிந்து கொண்டால் அவனுக்கு நம் நன்றி அறிவைக் காட்ட வேண்டும் அல்லவா? அவனுக்கு நாம் கைம்மாறு செய்ய இயலாது. நமக்கு என்று சொந்தமாக ஏதாவது இருந்தால் கொடுக்கலாம். அப்படி இருந்தாலும் அவன் நமக்குக் கொடுத்த அளவு நாம் திருப்பிக் கொடுக்க முடியுமா? அவன் நமக்குக் கொடுத்தானே! என்று மனமார எண்ணி நன்றி அறிவைக் காட்டவேண்டும். ஆயிர ரூபாய் திருமணத்துக்குக் கொண்டு வந்து பெண்ணைப் பெற்றவர்கள் கொடுக்கிறார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் எதிர் மரியாதைக்காக அந்த ஆயிர ரூபாயிலேயே ஐந்து ரூபாயை எடுத்து அவர்களிடத்தில் கொடுக்கிறார்கள். அது போலத்தான் ஆண்டவன் நமக்குத் தனுகரண புவன போகங்களை எல்லாம் தந்திருக்கிறான். நம்முடைய நன்றி அறிவைக் காட்டப் புதியதாக ஒரு பொருளை நாமே படைத்து அவனுக்குக் கொடுக்க முடி யாது. அவன் கொடுத்திருக்கிற நாவினால் அவன் புகழைப் பாடி நன்றி அறிவைக் காட்டலாம். 22