பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் றொன்று அருள் மயம். ஞானம், அருள் என்ற இரண்டின் கலப்பினால் தோன்றியவன் முருகன். இரண்டு பேரும் வேறு வேறு இல்லாத ஒன்றுபட்ட தோற்றம் ஆறுமுகன். அருள் வேறு, ஞானம் வேறு என்று இல்லாமல் அருளும் ஞானமும் ஒன்றாகக் கலந்து நிற்கின்ற கோலம் முருகன். உலகத்திற்கு இவன் குருநாதனாக இருக்க வேண்டுமென்று பரமேசுவரர் நினைத்தார். உலகத்திலுள்ளவர்களிடம் சென்று, 'நீங்கள் என்னுடைய குமாரனைக் குருநாதனாகக் கொண்டு உய்வு பெறுங்கள்' என்று சொன்னால் சிலர் கேட்பார்கள். எல்லாரும் அப்படிச் செய் வார்களா? சொல்லிக் காட்டுவதைவிடச் செய்து காட்டுவதே மிகச் சிறந்த உபதேசம் என்பர். "அப்படி இருங்கள்; இப்படிச் செய்யுங்கள்' என்று பிறருக்குப் பெரிய பெரிய சொற்பொழிவு களின் மூலம் பெரியவர்கள் உபதேசம் செய்யமாட்டார்கள். பிறர் எதைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்களோ அதைத் தங்கள் வாழ்வில் செய்தே காட்டுவார்கள். வேதாந்த தேசிகர் என்பவர் வைணவர்களின் குரு. அவர் ஒரு சமயம் ஓர் இடத்திற்குச் சென்றிருந்தார். வைணவர்களுக்குள் தீர்த்தம் யார் முதலில் வாங்கிக் கொள்வது, யார் அடுத்து வாங்கிக் கொள்வது என்று சண்டைகள் வரும். எப்போதும் முதல் தீர்த்தம் வேதாந்த தேசிகருக்குத்தான். ஊரில் இருந்த ஒரு பெரிய பணக்காரர், 'வேதாந்த தேசிகருக்கு அடுத்தபடியாக நான்தான் தீர்த்தம் வாங்கிக் கொள்வேன்' என்று சொல்லிக் கொண் டிருந்தார். தேசிகரிடமும் விண்ணப்பம் செய்து கொண்டார். "அப்படியே ஆகட்டும்' என்றார் தேசிகர். அந்தப் பணக்காரருக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்காக முதலில் தமக்குத் தீர்த்தம் கொடுக்க வந்த போது, அதை வாங்கிக் கொள்ளாமல் அங்கே இருந்த எல்லாரையும் வாங்கிக் கொள்ளச் சொன்னார். யாவரும் வாங்கிக் கொண்டுவிட்டார்கள். பிறகு வேறு யாரும் இல்லை என்றவுடன், "எனக்குத் தீர்த்தம் கொடுங்கள்' என்று சொல்லிப் பிறகு அந்தப் பணக்காரரைப் பார்த்து, 'நீங்கள் தீர்த்தம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னாராம். அவர் அந்தச் செல்வருக்குப் பணிவைத் தம் செய லாலே கற்பித்தார். அப்படி முருகனை எல்லோரும் குருநாதனாகக் கொண்டு வணங்கவேண்டும் என்பதை அறிவுறுத்தச் சிவபிரான் தாமே செய்து காட்டினார். 31了