பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மனம் ஒருமுகப்படுதல் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தன் நம் மனமாகிய பாம்பின் மீது மயிலை நடத்தினால் மனம் அடங்கிவிடும்; ஒரு முகப்பட்டுவிடும். மனத்தில் அமைந்திருக்கிற, ஐந்து பொறிகளின் வழியாகச் செல்கிற ஆசை அடங்கிவிடும். இதற்குத்தக்க வழி என்னவென்றால் இறைவன் திருப்புகழை மனனம் செய்வதுதான். இவ்வாறு மனத்தை ஒருமுகப்படுத்தப் பழகிக் கொண்டால், திருப்புகழைப் படித்துப் போற்றப் பழகிக் கொண்டால், காலனால் வருகிற அச்சம் வராது. இத்தகைய அருமையான கருத்தை இந்தப் பாட்டுச் சொல்கிறது. ★ படிக்கும் திருப்புகழ் போற்றுவன்; கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும் பொழுதுவந்து அஞ்சல்என் பாய்;பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான்மரு காகொடும் சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே! (படித்து வரும் உன் திருப்புகழை மனத்தில் வைத்துப் பாதுகாப்பேன்; யமன் கயிற்றினால் எறிந்து என்னைப் பிடிக்கும் மரண சமயத்தில் நீ எழுந்தருளி வந்து, பயப்படாதே" என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக: பெரிய பாம்பாகிய காளிங்கன் மேலே நின்று நடனம் செய்யும் கண்ணபிரானுடைய மருமகனே! கொடுமையான சூரன் நடுங்கும்படியாக மலைகளை இடிக்கும் தோகையையுடைய ஒப்பற்ற மயில் மீது ஏறிப் பவனிவரும் குதிரை வீரனே! போற்றுவன் - மனனம் செய்து பாதுகாப்பேன்; படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்றும் அதுபோல' (பிரபுலிங்க லீலை) என்பதில் போற்றும் என்ற சொல் இப்பொருளில் வந்தது. கூற்றுவன் - யமன். பாசம் - கயிறு. அஞ்சல் - அஞ்சாதே. பெரும்பாம்பு - காளிங்கன். பிரான் - கண்ணன். கலாபம் - தோகை, மயிலின் சிறகு, தனி-ஒப்பற்ற, இராவுத்தன் - குதிரையை அடக்கி ஒட்டும் வீரன்.)