பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் 1 அருணகிரியாரின் சமரச இயல்பு இதுவரையில் நாம் பார்த்துள்ள பல பாடல்களின் வாயிலாக அருணகிரிநாதப் பெருமான் பல வகையான சமரச வழிகளைக் காட்டுகிறார் என்பதை அறிந்திருக்கிறோம். சைவ வைணவ வேறுபாடு இல்லாமல் எல்லா மூர்த்திகளையும் வாயாராத் தம் பாடல்களிலே துதித்திருக்கிறார். யோகம், ஞானம், பக்தி என்ற மூன்றையும் மிக அழகாகத் தமது பாடல்களில் உணர்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல. தமிழிலே அவர் கொண்டுள்ள ஆர்வத் தினாலே தமிழை எல்லோரும் நன்றாகக் கற்கவேண்டும். பிழையறக் கற்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதையும் பார்த்தோம். தமிழ்ப் பாடல்களை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்றவர் அப்படிச் சொல்லும் பாட்டிலே தமிழுக் குரிய சிறப்பெழுத்துக்களை விரவ வைத்திருக்கிறார் என்பதை முன்பே கண்டோம். "அழித்துப் பிறக்கஒட் டாஅயில் வேலன் கவியைஅன்பால் எழுத்துப் பிழையற் கற்கின்றி லீர்எரிமூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெம் கூற்றன் விடும்கயிற்றால் கழுத்தில் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே!” என்ற அழகான செந்தமிழ்ப் பாடலில் இந்த அமைப்பைப் பார்க்கிறோம். தமிழ் மொழிக்கே சிறப்பான ழ கரமும், ற கரமும் இதில் அதிகமாக விரவிக் கிடக்கின்றன. முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த பல அலங்காரப் பாடல்களை நல்ல தமிழிலே சொன்ன பெருமான் அருணகிரியார்.