பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு அருணகிரி நாதர் மனிதன் இந்த உலகத்தில் வாழ்வதற்குரிய வகைகளையும் அவ்வப்போது சொல்லி வருகிறார். இறைவன் திருவருளைப் பெறுவதற்கு என்ன என்ன வழி என்பதைப் பல பாடல்களில் தம் அநுபவத்தைக் கொண்டு வழி காட்டுகிறார். சமுதாயமும் தனி மனிதனும் மனிதன் தனியாக வாழ்வது இல்லை. அவன் சமுதாயத்தில் ஒருவனாக இருந்து வாழ்கிறான். சமுதாயம் என்பது பல மனிதர்களின் கூட்டம். தனி மனிதன் நல்ல வழியில் நடந்து கொண்டால் சமுதாயம் சிறப்பான வழியில் வாழும். முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக ஒவ்வொரு மனிதனும் தனித்தனி மன இயல்பு உடையவனாக இருக்கிறான். சமுதாயம் என்பது தொகுதியாகப் பார்க்கும் போது ஒன்றாகத் தோன்றினாலும் ஒவ்வொரு மனிதனும் தனித் தனி நிலையில் இருக்கிறான். ஒருவன் கல்வி கற்றிருக்கிறான்; மற்றொருவன் செல்வம் பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு மக்கட் செல்வம் இருக்கிறது; வேறு ஒருவனுக்கு அது இருப்பது இல்லை. ஒருவன் வீட்டிலுள்ள குடும்பம் ஒற்றுமையாக வாழ்கிறது; வேறு வீட்டில் அப்படி இல்லை. மனைவியிடம் அன்பு உள்ளவனும், அன்பு இல்லாதவனும் அருகருகில் வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படி வேறுபாடான நிலையும், இயல்பும் கொண்டதுதான். ஈகையின் வகை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறை இருந்தால் அந்தக் குறையை அவரால் நீக்கிக் கொள்ள முடியாத போது அதனை நீக்குகின்ற ஆற்றல் உடையவர் அவருக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளமும் மேடும் இருக்கிற இடத்தில் மேட்டிலுள்ள அதிக மண்ணைப் பள்ளத்தில் போட்டு நிரவினால் சமநிலம் ஆகிவிடும்.