பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் நான்கு படி இறைவனுடைய திருவருள் இன்பத்தை இந்த உடம்பு இருக்கும்போதே பெறலாம். அதனை அடைவதற்குச் சில படிகள் உண்டு. அந்தப் படிகளை வெவ்வேறு பெயரிட்டுச் சொல்வது வழக்கம். அருணகிரிநாத சுவாமிகள் இந்த உடம்பில் இருக்கும்போதே முத்தி இன்பத்தை அடைவதற்கு நான்கு வகையான படிகளைச் சொல்கிறார். சாத்திரங்களில் சொல்வது போல முறையாகச் சொன்னாலும் அழகுபெறத் தோத்திரமாக அமைந்து இருக்கிறது இந்தப் பாட்டு. அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும்; அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும்; கொடியஐவர் பராக்குஅறல் வேண்டும்; மனமும் பதைப்பு அறல் வேண்டும்; என்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே! 'அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும்' என்பது முதல்படி, 'அன்பால் குராப்புனை தண்டையம் தாள் தொழல் வேண்டும்' என்பது இரண்டாவது படி; அதற்கப்பால் மூன்றா வது படி, "கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும்' என்பது; நான்காவது, "மனமும் பதைப்பு அறல் வேண்டும். கடைசியில் அடைய வேண்டியது ஒன்று வருகிறது. அதுதான் மேல்மாடி. "இராப்பகல் அற்ற இடம். படியின்மேல் படியாக ஏறிச் சென்று கடைசியில் உள்ள தளத்திற்குச் சென்றால் இன்பம் உண்டாகும். அதுதான் மோட்சம்.