பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உணர்வதற்குரிய தெளிவு உண்டாகும். அதனால் அச்சம் சிறிதும் எழாமல் தொலைந்துவிடும். 'எனக்கு இறைவனுடைய அருளில் நம்பிக்கை இருக்கிறது. அந்த அருளாகிய கவசம் இருப்பதால் பல ஆயுதங்களைக் கொண்டு யமன் என்பால் வந்தாலும் எனக்கு எந்தவிதமான ஊறுபாடும் நேராது. அவனுடைய ஆயுதங்கள் என்னை ஒன்றும் செய்யா என்ற உறுதிப்பாட்டுடன் கூறுகிறார் அருணகிரியார். ★ வேலா யுதன்சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன்அறியாச் சூலா யுதன்தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் கால்ஆயுதக்கொடியோன் அரு ளாய கவசம்உண்டுஎன் பால்ஆ யுதம்வரு மோயமனோடு பகைக்கினுமே? (வேற்படையையுடைய பெருமானும், சங்குசக்கரங்களாகிய படைக் கலங்களைக் கொண்ட திருமால், பிரமன் இருவரும் அறியாத சூவா யுதத்தையுடைய சிவபெருமான் அருளிய கந்தச்சுவாமியும், விளக்கு சுடர்போன்ற கொண்டையையும் காலில் ஆயுதத்தையும் உடைய கோழியைக் கொடியாக உடையவனுமாகிய முருகனது அருளாகிய கவசம் என்னிடம் இருக்கிறது; நான் யமனோடு பகை கொண்டாலும் என்னிடம் அவன் விடுக்கும் ஆயுதம் வருமோ? வேலாயுதன், கந்தச்சுவாமி, கொடியோன் என்று கூட்டுக. சங்கு சக்ராயுதன் - திருமால், விரிஞ்சன் - பிரமன். சுடர் - விளக்கு. குடுமி - கொண்டை. காலாயுதம் - கோழி. ஆயுதம் வருமோ - யமனுடைய ஆயுதம் வருமோ? வராதென்றபடி) முருகனை நம்பி அவன் திருவருளைப் பெறுகிறவர்களுக்கு யமபயம் இல்லை என்பது கருத்து. இது கந்தரலங்காரத்தில் 86ஆவது பாட்டு. 98