பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சக்தி இருக்க வேண்டும். பிரமனே அந்தச் சக்தியாக இருக்கிறான். அந்த வேலையைச் செய்வதற்கு பிரமன் நியமிக்கப்பட்டிருக் கிறான். இன்னாருக்கு இன்னபடி அநுபவத்தைத் தரவேண்டும் என்ற கணக்கு வைத்துச் செய்வதை, அறிவு இல்லாதவன் செய்ய முடியாது. குற்றவாளிகளுக்குரிய தண்டனையைக் கொடுக்கும் நீதிபதிக்குச் சட்டத்தில் நல்ல அறிவு இருக்க வேண்டும். சட்ட அறிவு இல்லாதவன் நடுநிலைமை இல்லாதவன்; நீதிபதி வேலைக்குத் தகுதி அற்றவன். பிரமனும் நடுநிலையில் நின்று அவரவர்களுடைய புண்ணிய பாவங்களின் கணக்கை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்பப் பிறப்பையும், அநுபவங்களையும் விதிக்க வேண்டும். இவ்வாறு விதிப்பதனால் அவனுக்கு விதி என்ற ஒரு பெயர் உண்டு. திருவள்ளுவரும் வகுத்தான், 'உலகியற்றியான் என்ற பெயரால் அவனைச் சொல்வர். "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்த லரிது’ என்றும், 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்' என்றும் கூறுவர். அவரவர்களுக்குரிய அநுபவங்களை வகுக்கும் வேலையைப் பிரமன் செய்கிறான். பிரமனுக்கு நான்கு முகங்கள், எட்டுக் கண்கள். அவன் எந்தப் பக்கத்திலும் கோடாமல் வேலை செய்ய வேண்டும். 'கோடாத வேதன்' என்று அருணகிரியார் கூறுவர். ஆகையால் எல்லாவற்றை யும் ஒரே சமயத்தில் பார்ப்பதற்குரிய கண்களும், முகங்களும் அவனுக்கு உள்ளன. நாம் முன்னாலே ஒருவன் வருவதைப் பார்த் தால் பின்னாலே வேறு ஒருவன் வருவதைப் பார்க்க முடியாது. ஒரே சமயத்தில் முன்னும் பின்னும் பார்க்கிற காட்சிதான் நடு நிலைக் காட்சியாக இருக்க முடியும். ஆகையால் நான்கு திக்கு களிலும் தலையும், கோணத் திசைகளையும் சேர்த்து எட்டுப் பக்கங்களிலும் பார்க்க எட்டுக் கண்களும் இருக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. எட்டுக் கண்ணும் விட்டெரிக்கும் அதிகாரம் உடையவன் அவன்தான். 138