பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று முறையிட்ட தேவர்கள் பழைய வாழ்வு பெறவேண்டுமென்ற கருணையினால் தன்னோடு பொருத சூரனாகிய மாமரத்தைச் செற்றான். அப்படிச் செற்றதற்குக் கருவியாக இருந்தது அவன் கையில் உள்ள வேல். அது ஞான சக்தி என்பதைப் பலமுறையும் பார்த்து வந்திருக்கிறோம். சேவலைக் கையிலே வெற்றிக் கொடியாக உயர்த்திய எம்பெருமான் பெரிய போரைச் செய்து அந்த வெற்றியை வாங்கித் தந்த வேலாயுதத்தை ஒரு திருக்கரத்தில் ஏந்தியிருக்கிறான். வானம்உய்யப் பொருமாவினைச் செற்ற போர் வேலனை. செங்கோட்டு வளம் இத்தகைய முருகன் திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக் கிறான். நீர்வளமும், நிலவளமும் பொருந்தியது திருச் செங்கோடு. அருணகிரியார் காலத்தில் அது அப்படி இருந்தது போலும். மரங்களில் அடிக்கடி நீர் வேண்டியிருப்பது கமுக மரம். பனை மரத்திற்குச் சிறியதாக இருக்கும்போது தண்ணிர் விட்டால் போதும். வளர்ந்த பிறகு விட வேண்டாம். தென்னை மரத்திற்குச் சிறிதாக இருக்கும் போது நன்றாகத் தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். வளர்ந்த பிறகு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். கமுக மரத்திற்கு எப்போதும் தண்ணிர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 'கை காய்த்தால் கமுகு காய்க்கும்” என்பது ஒரு பழமொழி. தண்ணீர் விட்டுவிட்டுக் கை காய்ப்புப் பெற வேண்டுமாம். அடிக்கடி மழை பெய்யும் இடத்தில்தான் கமுக மரம் வளர்ந்துவரும். இன்னும் காய்க்காத பல கமுக மரங்கள் திருச்செங்கோட்டில் நிறைய வளர்ந்திருக்கின்றன. அது மாத்திரம் அன்று. பல பழங்களைத் தரும் மாமரங்களும் வளர்ந்திருக்கின்றன. முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் மாமரங்கள் வளர்வதற்கு ஒரு பொருத்தம் உண்டு. அப்பெருமான் ஒரு மாம்பழத்தைப் பெற வேண்டுமென்று எண்ணி உலகத்தை வலம் வந்தான். அது கிடைக்காமையினால் பழனி மலை ஏறி நின்று தவக்கோலத்துடன் விளங்குகிறான். அத்தகைய முருகப் பெருமானுக்கு எப்பொழுதுமே நிவேதனம் பண்ணும்படி கனிகளைத் தருகிற மாமரங்கள் திருச் செங்கோட்டில் இருக்கின்றனவாம். நீர் வளத்தை நன்கு தெரி 177