பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை சொல்வார்கள். துள்ளிய கெண்டை போல இருக்கும் அந்தக் கண் இப்போது காதைப் போய் மோதுகிறது. சிறிய வள்ளை இலையின்மேல் துள்ளிப் பாய்கிற கெண்டை போல அந்தக் கண் மாறி மாறித் தாவுகிறது. அவன் அந்தக் காதைக் கண்டான். பின்பு அந்தக் கண்ணையும் கண்டான். கண்ட அளவில் நிற்கவில்லை. இத்தகைய பேரழகி நம்முடன் பேசுவாளா என்ற எண்ணம் தோன்றியது. நம்மைப் பார்ப்பாள் என்று எண்ணி அவள் கண்ணைக் கண்டான். அவள் பார்வையைச் சந்தித்த பிறகு, அவள் நம்முடன் பேசுவாளா என்று எண்ணினான். பேச்சு வரு கிற இடம் வாய் அல்லவா? அவன் பார்வை அங்கே தாவியது. அவளுடைய வாயிதழ்கள் கோவைப் பழம்போல இருந்தன. கோவைக்குத் தொண்டை என்று பெயர். சிறு வள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையை, அந்த வாயிலிருந்து ஒரு வார்த்தை வராதா என்று எண்ணி னான். இப்படிப் பருவம் உள்ள ஒரு காளை தன்னை நின்று நிதானமாகப் பார்க்கும் வண்ணம் நாணம் உடைய பெண் நிற்பாளா? ஆனால் எதிரே அந்தப் பெண் நின்று கொண்டுதான் இருந்தாள். அவள் நாணத்தை நீக்கிய பெண். பிறருடைய மனத்தை ஈர்ப்பதற்காகவே தன்னுடைய அங்க லாவண்யத்தைக் காட்டி மயக்கும் தொழிலில் வல்லவள். தன்னை நாடி வந்தவனை எளிதில் பல வகையில் அலைக்கழித்து, அவனிடம் காமத் தீயை மூட்டி, பின்பு அவனிடமிருந்து பணம் பறிக்கும் தொழில் உடையவள். இப்போது அவள் மெல்லத் தன் இதழைத் திறந்தாள். அதற்காக ஏங்கிக் கிடந்த இளைஞன், அவள் என்ன சொல்வாளோ என்று ஆவலோடு கவனித்தான். அவள் பேசி னாள். பிறவி பிறவியாகத் தொடர்ந்து வந்த காதல் உடையவர்கள் சந்தித்தால் முதலில் பெண் பேசுவது இல்லை. நாணம் மிக்கவள் ஆகையால் அவள் பேசுவதற்கு மிகவும் அஞ்சுவாள். அவள் பார்ப்பதுகூட இல்லை. முதலில் தலைவன் பார்க்கப் பின்பே அவள் பார்ப்பாள். அவன் தன்னுடைய உள்ளத்திலுள்ள அன்பைப் பல சொற்களால் வெளியிட, அவள் இறுதியாகப் பேசுவாள். ஆனால் இங்கோ காதல் ஏது? காமந்தான் இருக்கிறது. காமத்தை மூட்டிப் பொருள் பறிக்கும் தொழிலாளி இங்கே நிற்பவள். ஆகையால் 227