பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தான். ஆனாலும் அநுபவ அறிவிலே சிறந்தவர்களிடம் அவ்வப் போது நேரில் கேட்கும் கேள்விக்குக் கல்வியறிவு ஒப்பாகாது. பிறர் எழுதிய நூல்களைப் படிப்பது, வற்றலைக் கொண்டு கூட்டு முதலியன பண்ணுவது போலாகும். ஆனால் நேரில் நமக்கு உபதேசம் செய்து ஐயங்களை நீக்குபவர்களுடைய அநுபவம் நிறைந்த வார்த்தைகள் பச்சைக் காய்கறி போல இருக்கும். - 'கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை' - என்பது திருவள்ளுவர் வாக்கு. மனிதன் கற்க வேண்டியது இன்றி யமையாததே. கற்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் கேள்வி இருக்க வேண்டும். கற்பதற்கு ஒரு பருவம் உண்டு. இளமைப் பருவத்தில் கல்லாதவர்கள் பிற்காலத்தில் கற்பது என்பது அரிது. அப்படியின்றி எல்லாக் காலத்தும் கேட்கலாம். கற்றவர்களிடத் தில் சென்று நமக்கு வேண்டியவற்றைக் கேட்டால் நம் நிலை அறிந்து எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வார்கள். நாம் கேட்பவற்றில் ஐயம் இருந்தால் அவர்கள் அதைத் தெளி விப்பார்கள். ஒளவைப் பாட்டி அதனால் தான், "கேள்வி முயல் என்று சொன்னாள். கற்றவனும்தான் கற்ற கல்வியில் உண்டாகிற ஐயங்களைக் கேள்வியினால்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆகையால் கல்விக்கும் கேள்வி இன்றியமையாதது. ஒருவனுக்கு காது நன்றாக இருக்கிறது. அவன் ஒன்றைக் கேட்டால் நன்றாகப் புரிந்து கொள்கிறான். காது செவிடாக இருந்தால் என்ன சொன்னாலும் காதில் விழாது. நல்ல விஷயங் களைச் சொல்பவர்கள் இருக்கும்போது, கேட்காமல் இருந்தால் நம் காது ஒலியைக் கேட்கும் காதாக இருந்தாலும் ஒருவகையில் செவிடுதான். இயல்பாக உள்ள காதுக்குப் பின்னும் கேள்வி என்ற சலாகை போட்டால் நல்ல காதாகும். விக்கிரகங் களைப் பண்ணுகிறவர்கள் காது, மூக்கு முதலிய வற்றைக் கடைசியில் சுத்தம் பண்ணுவதற்கு ஒரு சலாகையை எடுத்துக் குடைவார்கள். பிசிர் எல்லாம் போவதற்கு அப்படிச் செய்வது உண்டு. அப்படி நம்முடைய காதிலே ஒரு சலாகையைப் போட்டுக் குடைய வேண் டும். அது இரும்புச் சலாகையன்று. நல்லவர்களிடம் கேட்கும் கேள்வி என்னும் சலாகையினால் முன்னாலே துளையுள்ள காதைப் பின்னும் துளையிட்டுத் தூய்மைப்படுத்த வேண்டும். 252