பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி அநுபவம் கிடைக்காது. பிறர் நமக்கு அரிசி தரலாம். நமக்காகச் சமையல் செய்யலாம். சாப்பாட்டை நம்முடைய இலையில் பரிமாறலாம். பின்னும் கருணை உடையவர்களானால் நம் வாயி லும் ஊட்டலாம். ஆனால் நமக்காக அவர்கள் விழுங்க முடியாது. விழுங்கும் முயற்சி இருந்தால்தான் சோறு நம் வயிற்றில் புகுந்து அதனால் வருகிற அநுபவம் நமக்குக் கிடைக்கும். சத்சங்கத்தில் சேர்ந்தால் வழி புலப்படுமேயன்றி அநுபவம் கிடைக்காது. தெய்வங்கூடக் காட்டுமேயன்றி ஊட்டாது. தனிமை ஆதலினால் முயற்சி செய்யும் ஆர்வம் வேண்டும். தனிமை வேண்டும். அதனால்தான், 'தனித்திரு, பசித்திரு, விழித்திரு' என்று பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். கல்வி, கேள்வி, சிந்தித்தல், தியானித்தல் ஆகிய படிகளை எல்லாம் கடந்து, நிஷ்டை கூடும் நிலைக்கு வர வேண்டும். தனிமையில் மனத்தைச் செலுத்தி, சிந்தித்து இறைவனுடைய அருளிலே ஈடுபட வேண்டும். அப்போது ஆண்டவன் நம்மைச் சந்திக்க வருவான். கூட்டத்தில் கூடி இருக்கும்போது அவனுடைய அருள் நமக்குக் கிடைக்கத் தான் கிடைக்கிறது. அது நாலுபேருக்கு நடுவில் தன்னுடைய நாயகன் கையிலுள்ள புத்தகத்தை நாயகி பெறுவது போன்றது. நாயகன்தான் கொடுக்க வேண்டுமென்பது இல்லை. வேறு யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கணவனும், மனைவியும் கடைக்குப் போகிறார்கள். அங்கே நிறையச் சாமான் வாங்கு கிறார்கள். கணவன் சுமையைத் தூக்க முடியாமல் ஒரு பாகத்தை நாயகியினிடம் கொடுக்கிறான். அப்போதும் அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறாள். அவன் பழங்களை வாங்குகிறான். ஒன்றை நாயகிக்குக் கொடுக்கிறான். இவை எல்லாம் அந்த இரண்டுபேருக்குமிடையே நடந்தாலும் இந்தத் தகுதியை மற்ற வர்களும் பெறலாம். நாலுபேர் காணச் செய்கின்ற இத்தகைய காரியங்களை இரண்டு ஆடவர்கள் தங்களுக்குள் செய்யலாம். எந்த இரண்டு பேர்களாக இருந்தாலும் செய்து கொள்ளலாம். நாயகனிடம் இப்படி வாங்குவதில் நாயகிக்கு ஒர் இன்பம் இருக்கலாம். ஆனாலும் நாயகனைப் பெற்றதனால் அவள் அடை கிற தனி உரிமையான இன்பம் இது அன்று. அதனை அவள் 257