பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தனித்து இருந்து பெறுவாள். ஆண்டவனுடைய திருவருளால் நாம் இப்போது பெற்ற பலவகையான நலங்கள் பொதுவான அருள். கடைவீதியில் நாயகனும், நாயகியும் சந்தித்து ஒருவருக் கொருவர் உதவி செய்துகொள்வது போன்றது. ஆனால் அவனைத் தனியாகச் சந்திக்கின்ற சந்திப்பு, தனி உரிமை பெற்றது. இறைவன் அப்படித் தனியே சந்திக்கின்ற நிலை உண்டு. தனி என்பது யாரும் இல்லாத இடம். யாரும் இல்லாத இடம் என்றால் இறைவன் இல்லாத இடம் அன்று. அவன் இல்லாத இடமே இல்லை. அவனை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் தனியே இருந்து சந்திக்கிறது இல்லை. நாம் மனத் தோடு, உடம்போடு சந்திக்கிறோம். அதனால் அவனை நாம் இன்னும் கண்டுகொள்ள முடிவதில்லை. அவனும் நம்மோடு பழகினாலும் நாலு பேர்களுக்கு நடுவில் இருக்கிறானே என்று ஏதோ அயலான் போலவே பழகுகிறான். இப்படி உள்ள நாம் தனியாக வந்து அவனைச் சந்தித்தால் நம்மை அணைத்துக் கொள் வான். முத்தி இன்பம் தருவான். நம்மோடு பிறவிதோறும் வந் திருக்கிற பலவற்றை விட்டுவிட்டுத் தனியே செல்கிற பழக்கம் நமக்கு இல்லாமல் போயிற்று. ஆகையால் அவன் தொடர்பு நமக்கு இருந்தாலும் அவனைத் தனியே சந்திக்க இயலாமல் போகிறது. அதனால் வரும் இன்பமும் நமக்குக் கிடைப்பது இல்லை. 2 கல்வியினாலும், கேள்வியினாலும் ஆண்டவனைச் சந்திக்க முடியாது என்று அருணகிரியார் சொல்கிறார். யாரும் இல்லாத இடத்திலே என்னுடைய நாயகனைச் சந்திக்க வேண்டுமே என்று காதலி ஏங்குகிறாள். அவளைப் பார்த்து அவளுடைய தாய் சொல்கிறாள்; 'பெண்ணே, அவன் யாரும் உள்ள இடத்திலும் இருக்கிறான். யாரும் இல்லாத இடத்திலும் இருக்கிறான். யாரும் இல்லாத இடத்தைத் தெரிந்துகொண்டு போக வேண்டும். உன்னுடன் சில பேரை அழைத்துக்கொண்டு போனால் அவன் தனியாக இருந்தாலும் பயன் இல்லை. நீ யாரும் இன்றித் தனியே இருந்தால் உன்னிடம் அவனே வந்து சந்திப்பான். ஆகவே அவன் 258