பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் கணியன் பூங்குன்றனார் பாட்டு தமிழ்நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள், அதிலும் இலக்கியத் துறையில் சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள், அடிக்கடி சொல்கிற வரி ஒன்று உண்டு. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அடியை எத்தனையோ இலக்கியச் சொற்பொழிவாளர் களிடம் நாம் கேட்டிருக்கிறோம். புறநானூறு என்ற சங்க நூலில் வரும் பாட்டு ஒன்றின் முதல் அடி அது. அதைப் பாடியவர் கணியன் பூங்குன்றன் என்ற சங்ககாலப் புலவர். பெரும்பாலும் அந்தப் பாட்டின் முதல் அடியை மாத்திரம் சொல்லி விட்டு விடுவார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர், அடுத்த அடியை அப்பால் கேளிர் என்ற முறையில் அதனை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அந்தப் பாட்டு உலகம் முழுவதும் ஒன்று என்ற நினைப்பை உண்டாக்குவதோடு, வேறு ஒரு கருத்தையும் வற்புறுத்துவதற்காக எழுந்தது. பாடினவர் சோதிடம் அறிந்தவர். கணி, கணியன் என்பன சோதிடனுக்குரிய பெயர். பூங்குன்றனார் என்ற அந்தப் புலவர் சோதிடம் நன்றாகத் தெரிந்தவர். முன்னை வினைப்பயனால் இந்தப் பிறவியில் வருகிற விளைவுகளை எல்லாம் ஒருவாறு தெரிந்து சொல்வது சோதிடம். ஆகவே சோதிட நூலுக்கு அடிப்படையாக நிற்பது விதி. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குச் சோதிடத்தில் நம்பிக்கை இராது. இந்திய நாட்டில் விதியின் வலிமையை வற்புறுத்திய பெரியவர்களில் திருவள்ளுவரும் ஒருவர். திருக்குறளில் ஊழ் என்று தனியே ஒர் அதிகாரம் வைத்திருக்கிறார். கணியன் பூங்குன்றனார் பாடிய பாட்டும் விதியை வற்புறுத்த வந்ததுதான். அவர் சொல்கிற கருத்தைக் கொஞ்சம் கேட்கலாம்.