பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதியும் விதியும் எண்ணமே வருவதில்லை. கரையைப் பற்றிய எண்ணந்தான் இயல்பாக வரும். ஆனால் வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதனோ அடுத்த பிறவி நல்ல பிறவியாக வரவேண்டுமென்று எண்ணுவது இல்லை. பிறவியே இல்லாத கருணைக் கடலில் கலக்கவேண்டு மென்று எண்ணுவதும் இல்லை. இப்போதுள்ள வாழ்க்கையில் இன்னும் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்றே ஆசைப்படுகிறான். 'நெடுநாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சுபுண் ஆவர்' என்று தாயுமானவர் பாடுவார். இந்த வாழ்வில் அத்தனை அன்பு நமக்கு இருக்கிறது. உடம்பு எத்தனையோ துன்பத்தைத் தருவது, நோயைப் பெறுவது, பசி முதலிய குறைபாடுகளையுடையது. இது தெரிந்தும் இதனைப் போற்றி வாழ்கிறோம். நோய் வந்த உடம்பை விட்டுவிட்டு நீங்கிவிடலாம் என்ற எண்ணம் வருவது இல்லை. அழுகி ஒழுகும் உடம்பு உடையவர்களும், நினைத்தால் தற்கொலை செய்துகொள்வதற்குரிய வாய்ப்பு இருக்கவும், அவ்வாறு செய்வதில்லை. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்ற அச்சமே காரணம்; அல்லது பழகின இந்த உடம்பிலுள்ள பற்று அவ்வாறு செய்ய விடுவதில்லை. இதையே நான் என்று நினைத்து வளர்த்து வருகிறோம். இப்படி அமைந்த உடம்பு நமக்கு நலம் செய்வதாக இருந்தால் குற்றம் இல்லை. இதுவோ நரம்பால் பொதிந்த பொதி. மாடு பொதி சுமந்தால் அதற்கு எந்தவிதமான லாபமும் இல்லை. பொதியினுடைய பாரம் கழுத்தை அமிழ்த்தும். அப்படித்தான் உயிருக்கு உடம்பு பெரும் துன்பத்தைத் தருகிறது. ஆனால் உடம்பைப் பாரம் என்றே நாம் எண்ணுவது இல்லை. உடம்பில் அருவருப்பு ஞானிகளுக்கு இந்த உடம்பே பெரிய பாரமாகத் தோற்றும். 'ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே ஏற்றுத் திரிந்துவிட் டேன்இறை வாகச்சி ஏகம்பனே' என்று இந்தப் பாரம் தாங்காமல் பாடினார் பட்டினத்தார். 3O3