பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உண்டாகும். மூன்று கரணங்களாலும் செய்யும் அருச்சனையே சிறந்தது; முழுமையானது. மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் துவ, வாய் பழக்கத்தால் நாமத்தைச் சொல்வதும் உண்டு. பலவற்றைப் பேசிக் கொண்டு அருச்சனை செய்வதை மாற்ற ஆண்டவன் திருநாமத்தைச் சொல்லுதலை வைத்திருக்கிறார்கள். மனத்தை அலையவிட்டால் பூவைத் தூவுவதும் நாமஞ் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன, 'கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே' என்பது பட்டினத்தார் பாடல். மனம் ஒன்றிச் செய்யாத எந்தச் செயலும் பயனின்றி ஒழியும். அப்படியிருக்க இறைவனிடம் மனம் ஒன்றுபடுவதற்காகவே செய்யும் வழிபாட்டில் அதனை இணைக்காவிட்டால் பூசையினால் என்ன பயன் கிடைக்கும்? ஆகவே, மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம் இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரியார், தகட்டிற் சிறந்த கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருளாய் என்று தம் விண்ணப்பத்தைத் தொடங்குகிறார். 3 கடம்ப மலர் முருகனுக்குக் கடம்ப மலரில் விருப்பம் மிகுதி. அதனால் அவனைக் கடம்பன் என்றே சொல்வார்கள். 20