பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு அவன் திருவுள்ளம் அந்த நிலை வரவேண்டுமானால் நாமாக முயன்று அடைய முடியாது. இறைவன் திருவருள் இருந்தாலன்றி அது நமக்குக் கிடைக்காது. நாம் அவனை அடைய வேண்டுமென்று நினைத்த அளவில் அது கைகூடுவது இல்லை. ஆண்டவன் நம்மைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று திருவுள்ளம் கொள்ள வேண்டும். 'நினைப்பித்தால் நின்னை நினைப்பேன்’ என்று ஒரு பெரியவர் சொன்னார். 'சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார வந்தனை” என்று மணிவாசகப் பெருமான் சொல்வார். அவனை நாம் நினைப்பதற்கு அவன்தான் வந்து துணையாக நிற்க வேண்டும். 'அவனரு ளாலே அவன்தாள் வணங்கி’ என்பது திருவாசகம். 'உன்னுடைய கமலக் கழலுடன் நான் சேர வேண்டுமென்று முயன்றால் பயன் இல்லை. என்னுடைய எல்லைக்குள் அகப்பட்டது அன்று அது. நீ உன்னுடைய கழ லுடன் என்னைச் சேர்த்துக்கொள்வதற்குத் திருவுள்ளம் பாலிக்க வேண்டும்' என்று அருணகிரியார் சொல்கிறார். 'பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே' என்பது அப்பர் திருவாக்கு. நாம் அவனை நினைப்பதற்கு முன்னால் அவன் நம்மை நினைந்து தன்னிடத்தில் நமக்குப் பக்தியை உண்டாக்க வேண்டும். - “என்னை நினைந்து அடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினைக்கத் தருகின்றான்' என்று நம்பியாண்டார் நம்பி பாடுகின்றார். ஆகவே, ஆண்டவன் நம்மிடத்திலுள்ள கருணையினால் நம் உள்ளத்திற்குள் கொழுகொம்பு நடுவது போலத் தன்னுடைய கமலக் கழலை நாட்டி அருள வேண்டும். கொடி தனக்கு 319