பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 'இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு' என ஒளவையார் பாட்டில் விடுவது வீடு என்ற விளக்கம் இருக்கிறது. செய்யவேண்டிய சாதனங்களைப் பயிலாமல் இருந்தாலும் முருகன் பெருங்கருணையினால் பிரபஞ்சச் சேற்றை நீக்கினான் என்று முதல் பாடலில் பாச நீக்கத்தைச் சொன்னவர், எந்தவித மான தகுதியும் இல்லாத எனக்கு முருகன் பெருங் கருணை யினால் ஜீவன் முக்த நிலையை அருளினான் என்று கடைசிப் பாட்டில் சொல்லிக் கந்தர் அலங்காரத்தை நிறைவேற்றுகிறார். முதலிலும் முடிவிலும் பொதுவாக அமைந்திருப்பவை தம் தகுதி யின்மையும், இறைவன் பெருங்கருணையும், அதனால் விளைந்த அநுபவமும், அதுகண்டு பெற்ற வியப்பும் என்பனவாம். இனி அலங்காரத்தை நிறைவாக்கும் இந்த நூறாவது பாடலிலே புகுந்து பார்க்கலாம். மூன்று நிலை இந்தப் பாட்டு மூன்று வேறு நிலைகளைக் காட்டுகின்றது. முன்னைய நிலை, இறைவன் அருளால் பெற்ற பயிற்சி நிலை, அதனால் விளைந்த விளைவு என்று அந்த மூன்று பகுதியையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம். இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை என்பது முன்னை நிலை; இறைவன் அருள் பெறாத ஆன்மாவின் நிலை. அன்பால் கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! என்பது இரண்டாவது நிலை. இறைவன் காட்டிய வழியைத் தெரிவிப்பது இது. முன்பு காட்டியது தரையானால் இது மேலே ஏறுவதற்குரிய படி போன்றது. இயல்பு நிலை, சாதன நிலை என்று இவ்விரண்டையும் கூறலாம்.அடுத்த நிலை, பிறவி அற இச்சிறை விடுதலைப் பட்டது; விட்டது பாச வினை விலங்கே என்பது. இது பயன் அல்லது அநுபவம்; இது சாத்திய நிலை. படி களில் ஏறியவன் மேல்தளத்தை அடைந்துவிட்டது போன்றது இது. : 328