பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 சிலம்பு ஊடுருவப் பொரு வடிவேலும் என்று சொன்னார் அருணகிரியார். பழைய வரலாறு மற்றொரு செய்தியும் இங்கே நினைப்பதற்குரியது. நாம் படிக்கிற கந்தபுராணத்தில் கிரெளஞ்சாசுரன் மலைவடிவாக இருந்தான் என்பதும், தேவர்களுக்குப் பல துன்பங்களைச் செய் தான் என்பதும் வருகின்றன. பழைய வரலாறு ஒன்று உண்டு. அதை முன்பும் நாம் நினைப்பூட்டிக் கொண்டிருக்கிறோம். சூர பன்மாவுக்குக் கிரெளஞ்சம் என்ற மலை அரணாக இருந்தது என்றும், அது பறக்கும்போது அவன் உள் இருந்தான் என்றும், முருகப்பெருமான் வேலை ஒச்சியபோது அந்த வேல் கிரெளஞ்ச மலையை ஊடுருவி அதன் உள்ளே இருந்த சூரனையும் ஊடுருவிக் கொன்றது என்றும் பழைய காலத்தில் வரலாறுகள் வழங்கி வந்தன. தக்கயாகப் பரணியில் அதனை ஒட்டக்கூத்தர் பாடுகிறார். “ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலைமார்பும் உடனுடறப் பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவோம்’ என்பது அந்தப் பாட்டு. அருணகிரிநாதப் பெருமானும் இந்த வரலாற்றைப் பலவிடங்களில் சொல்லியிருக்கிறார். 'கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடுவே லவனே' என்பது கந்தர் அநுபூதி. ஆகவே இங்கே, சிலம்பு ஊடுருவப் பொருவடிவேலும் என்று சொன்னாலும் சிலம்புக்குள் இருந்த சூரனையும் ஊடுருவிப் புகுந்து அழித்தது வேல் என்ற பொருளும் குறிப்பாக இருக்கிறதென்று கொள்ளலாம். கிரெளஞ்சாசுரனுக்குள் சூரன் மறைந்திருப்பது போல, சிலம்பு ஊடுருவப் பொருவடி வேல் சூரனையும் ஊடுருவிக் கொன்றது என்பது இதில் மறைந் திருக்கிறது என்று கொள்ளலாம். இப்போது நாம் ஆண்டவனுடைய திருக்கரத்தையும், அது பற்றியிருக்கும் வேலையும் பார்த்தோம். ஆண்டவன் பெருவீரம் உடையவன். வேலாயுதம் அவனுடைய வீரத்தினால் சிறப்பு அடைகிறது. 37Ο