பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொள்வதற்கு ஒரு மணி ஆயிற்று. அப்பால் மட்டக்களப்பு அன்பர்களும், நானும், என்னுடைய காரியாலய அன்பரும் ஒரு காரில் புறப்பட்டோம். எங்களுடன் திருவாளர் பொ. கிருஷ்ண பிள்ளை என்ற தமிழ்ப்புலவரும் வந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பல ஊர்களைக் கடந்து பொலன்னருவா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். பழங்காலத்தில் அரசர்கள் ஆண்ட இடம் அது. பல அருமையான சின்னங்களை இன்றும் அந்த நகரில் பாது காத்து வருகிறார்கள். அங்கே நாங்கள் வரும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. கதிரவன் மேல் திசையில் மறைந்தான். அப்போது கார் ஒட்டியவர் ஒன்று சொன்னார்; “இங்கே தங்கி உணவு கொண்டு இரவு இங்கேயே உறங்கிவிடலாம். மிக விடியற் காலையில் எழுந்திருந்து இங்கேயிருந்து புறப்பட்டுப் போகலாம். இன்னும் நூறு மைல்களாவது போகவேண்டியிருக்கும்” என்று சொன்னார். என்னுடன் வந்தவர்கள் அதற்கு இசையவில்லை. 'மட்டக் களப்பில் உள்ள நண்பர்கள், இவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களது ஆவல் கட்டுக்கடங்காமல் இருக்கும். இங்கே தங்காமல் எப்படியாவது அங்கே போய்விட்டால் ஒரேயடியாக இளைப்பாறிக் கொள்ளலாம்' என்று வற்புறுத்தினார்கள். அது வும் சரி என்று நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் உரையாடிக் கொண்டே போனோம். எங்களுடன் வந்த பண்டித கிருஷ்ணபிள்ளை நன்றாகப் படித்தவர். சிறந்த ரசிகர். அவர் பலவற்றைச் சொல்ல, நானும் தமிழ் சம்பந்தமான பல கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்தேன். பின்பு திருப்புகழ் சில பாடினேன். கந்தர் அலங்கார நுட்பங்களைச் சொல்லத் தொடங்கினேன். சில பாடல்களில் உள்ள நயங்களைச் சொன்னவன், பேச்சில் பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டுக் கந்தர் அலங்காரப் பாடல்களையே சொல்லலானேன். அந்தப் பாடல்களை வாய்விட்டுப் பாடத் தொடங்கியவுடனே எனக்கு உணர்ச்சி விஞ்சியது. மற்றவர்கள் கேட்கிறார்களோ, இல்லையோ என்பதைக் கவனியாமல் நான் உணர்ச்சி வசப்பட்டுப் பாடிக் கொண்டே இருந்தேன். நல்ல வேளை மற்றவர்கள் அமைதி யாகக் கேட்டு வந்தார்கள். 458