84 கந்தவேள் கதையமுதம் இறைவனும், இறைவியும் செய்கின்ற காரியங்கள் உலக மக்களுக்குச் சில உண்மைகளைக் காட்டுவதற்காக நடத்திக் காட்டும் திருவிளையாடல்கள். அம்பிகை தவம் செய்தாள்; அவளைச் சோதிப்பதற்கு ஆண்டவன் எழுந்தருளினான். இது ஓர் உண்மையை நினைப்பூட்டுகின்றது. ஆண்டவன் திருவருளை ஒருவன் பெற வேண்டுமானால் பல வகையான சோதனைகளுக்கு ஆட்பட வேண்டும். இறைவனுடைய திருவருளைப் பெறுவது எளிதான காரியம் அன்று. பல்லூழி காலம் பயின்றானை அர்ச்சிக்கின் நல்லறிவு சற்றே நகும்" என்பார்கள். பக்தன் உள்ளத்து அன்பின் ஆழத்தைச் சோதிப்ப தற்கு இறைவன் பல வகையான இடர்களை உண்டாக்குவான். அத்தனை சோதனைகளையும் அவன் வென்று தன்னுடைய தகுதியைக் காட்டுவானானால் இறைவன் தன் அருளை வழங்குவான். பக்குவம் இல்லாதவர்களுக்கு அருளை ஈந்தால் அருளும் பயன்படாமல் போகும்; அவர்களுக்கும் எந்த நன்மையும் உண்டாகாது. வயிற்று வலியால் துடிக்கிற குழந்தைக்கு அல்வாவைக் கொடுத்தால் குழந்தை யின் வயிற்றுவலி அதிகமாகிப் போகும்; அல்வாவும் வீணாகும். ஆகவே, இறைவன் பக்குவம் உடைய ஆன்மாவுக்கேற்றபடி தன் அருளைத் தருவான். இங்கே அம்பிகையைப் பல வகையாகச் சோதனை செய்தது, பக்தனை ஆண்டவன் சோதனை புரிவான் என்ற உண்மையைத் தெரிவிப்பதற்காகத்தான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை