பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கந்தவேள் கதையமுதம் மேலும் முருகன் சொன்னான்; "அவன் அறியாமை கொண்டவனாக இருப்பதோடு கூட, தான் பெரிய காரியத்தைச் செய்வதாக எண்ணி அகங்காரம் கொண்டிருக்கிறான், யாரையும் மதிக்கிறது இல்லை. ஆகவே அவனுடைய சிறையை மீட்கமாட்டேன்" என்று சொன்னான். அப்போது சிவபெருமான் சிறிது சினம் கொண்டவன் போல, "என்ன சொல்கிறாய் ? " என்று கேட்க, அவனது திருவுள்ளத்தை அறிந்துகொண்டு, முருகன் தன் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் சொல்லிப் பிரமனைச் சிறையிலிருந்து மீட்டு வாருங்கள் என்றான். பிரமன் சிறை மீண்டு வந்தான். அவன் கையைப் பிடித்து முருகன் சிவபெருமானுக்கு முன்னாலே அவனை விடுத்தான். பிரமன் இறைவனை வணங்கி நாணத்தோடு நின்றான். அப்போது அவனைப் பார்த்து, "நீ மிகவும் வருந்தினைபோலும் !" என்று தட்டிக் கொடுத்தான் சிவபெருமான். புராணங்களிலும், காவியங்களிலும் மக்கள் எப்படி எப்படி நடக்கவேண்டுமென்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவது கவிஞர் களுடைய இயல்பு. இங்கே சிவபெருமான் விடுதலை பெற்று வந்த பிரமனைப் பார்த்து, 'என்னடா பைத்தியக்காரா? உனக்கு வேலை கொடுத்ததனால் அகங்காரம் கொண்டாயா? நம் பிள்ளையை அவமதிக்கலாமா?" என்று கேட்கவில்லை. 'பாவம்! நீ வருத்தம் அடைந்தாய் போல இருக்கிறது" என்று அருள் புரிந்தான். வேலைக்காரன் தவறு செய்தால், அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவனுக்கு ஆறுதல் உண்டாகாது. பரமேசுவரனுக்கு இது தெரியாதா? பிரமனைக் கண்டிக்காமல், "நீ சிறையில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு விட்டாயா?" என்று ஆறுதல் கூறினானாம். அதைக் கேட்டுப் பிரமன் மிகவும் நாணத்தோடு மனம் நைந்து பேசினான். "எம்பெருமானே, தேவரீருடைய குமாரர் எனக்குச் செய்த இந்தத் தண்டனை தவறு அல்ல. அதனால் நான் நல்ல அறிவைப் பெற்றேன். என் அகந்தை போயிற்று. நான் செய்த பாவங்கள் எல்லாம் மாறிவிட்டன. முருகப் பெருமான் செய்தது எனக்கு நல்லது ஆயிற்று. நான் தூய்மை அடைந்தேன்” என்று சொன்னான்.