பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கந்தவேள் கதையமுதம் அடைகின்ற புகழ் எல்லாம் என்னுடைய புகழ் அல்லவா?" என்று பிரமன் சொல்லி அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தான்; வில், தேர், பிரம்மாஸ்திரம் முதலியவற்றைக் கொடுத்தான். அதன் பிறகு சூரபன்மன் வைகுண்டத்திற்குப் போனான். பாற் கடலுக்கு வந்தானே என்று அங்கு ஆசீர்வாதம் பண்ணிவிட்டு, வைகுண்டத்திற்கு வந்த நாராயணர், அங்கும் அவன் வந்ததை அறிந்து, "வாருங்கள் குழந்தைகளே!" என்று அங்கும் ஆசீர்வாதம் செய்தார். 44 சூரன் முடிசூடுதலும் மணம் புரிதலும் பிறகு தென் கடலுக்கு வந்து, விசுவகர்மாவை அழைத்துப் பெரிய நகரம் ஒன்றைச் சூரன் உண்டாக்கினான். அந்த நகரத்தில் வேதம் ஓதும் மண்டபத்தை அமைத்தான். அந்த நகரத்திற்கு வீர மகேந்திரபுரம் என்று பெயர் வைத்தான். இந்திரனுடைய ஊருக்கு இந்திரபுரி என்று பெயர். பெருமாள் பெத்த பெருமாள் ஆனது போல, சூரன் தன்னுடைய நகரத்திற்கு வீரமகேந்திரபுரம் என்று பேர் அமைத்தான். வடகடலுக்கு நடுவில் ஆசுரம் என்ற ஒரு நகரத்தை அமைத்துச் சிங்கமுகாசுரனுக்குக் கொடுத்தான். மேற்குப் பக்கம் மாயாபுரி என்னும் நகரத்தை அமைத்துத் தாரகனுக்குக் கொடுத்தான். சூரபன்மனுக்குப் பிரம தேவனே முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். வந்து சீய மணித்தவி சேறினன்: அந்த எல்லையில் அச்சுதற் காமெனும் இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான். 9 (பட்டாபிடேகப்.6.) (சீய மணித்தவிக மாணிக்கங்களாலான சிங்காசனம். எல்லையில்-சமயத்தில். அச்சுதற்கு ஆம் எனும் - திருமாலுக்கு ஏற்றது என்று சொல்லத்தக்க, இந்திரத்திரு மாமுடி - இந்திரன் அணிந்திருந்த அழகிய பெரிய மகுடத்தை.) விசுவகர்மன் தன் மகளாகிய பதுமகோமளையைச் சூரனுக்கு மணம் செய்து கொடுத்தான். யமன் தன் மகளாகிய விபுதையைச் சிங்கமுகாசுரனுக்கு மணம் செய்து கொடுத்தான். நிருதி தன் புதல்வி சவுரியைத் தாரகாசுரனுக்கு மணம் செய்து கொடுத்தான்.