தக்க யாக சங்காரம் 525 இப்படியே அங்கே இருந்த பூதகணங்கள் எல்லாம் தக்கனுக்கு உறவாக இருந்த மருமகன்மாரை அடித்தார்கள். வாயினால் சொல்ல னொண்ணாதபடி அவர்களுக்குத் தண்டனை விதித்தார்கள். ஆண்ட வனை நினைந்து நல்ல வகையில் வேள்வி நடக்க வேண்டிய அந்த இடத்தில் குத்து, வெட்டு என்ற ஒலிகளே எழுந்தன. வேதகானம் கேட்க வேண்டிய இடத்தில் இப்படிச் சங்காரம் பண்ணுவதற்குரிய வார்த்தைகள் எழுந்தன. திருமால் பொருதல் அப்போது திருமால் வீரபத்திரனை எதிர்க்கச் சென்றார். அவர் கருடனை நினைத்தவுடன் அவன் வந்தான். அவன்மேல் ஏறிக்கொண்டு வீரபத்திரனோடு சண்டையிடம் புறப்பட்டார். கருடன் போரில் அழிந்தான். பிறகு தம் கோபத்தையே கருடனாக்கி அதன்மேல் ஏறிப் பொர வந்தார், திருமால். கருட வாகனத்தின் மேல் அவர் ஏறியதைப் பார்த்தபோது, வீரபத்திரன் ஏறி நின்று போர் செய்யச் சிவபெருமான் ஒரு தேரை அங்கே வரும்படியாக அருள் பாலித்தான். வெருவரும் பெருந்திறல் வீரன், தண்துழாய் அரியொடு போர்செய, ஆதி நாயகன், திரைகடல் உலகமும் சிறிது தான்என ஒருபெருந் தேரினை உய்த்திட் டான்ஆரோ, (யாகசங்காரம். 22.) அப்போது மயங்கி விழுந்திருந்த பிரமன், மயக்கம் தெளிந்து எழ, வீரபத்திரனது தேரைச் செலுத்துவதற்கு எண்ணினான். "நீயும், உன் துணைவி ஆகிய பத்திர காளியும் இந்தத் தேரில் ஏறிக் கொள்ளுங்கள் என்று அவர்களை வேண்டினான். அப்படியே அவர்கள் தேரில் ஏறிக் கொண்டவுடன் பிரமன் அந்தத் தேரைச் செலுத்தினான். அப்போது திருமால் வீரபத்திரனைப் பார்த்துக் கேட்கத் தொடங்கினார்; "சிவபெருமானைப் பழித்த தக்கனை நீ அழித்தது நியாயம். ஆனால் சிறிதும் குற்றம் இல்லாத தேவர்களை நீ ஏன் அழித்தாய்? யாகத்தை ஏன் நீ அழித்தாய்? இதற்கெல்லாம் காரணம் சொல்" என்று கேட்டார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/545
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை