பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தவேள் கதையமுதம் அதுபோலக் குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது வெறும் அடையாளமாக இல்லாமல், பக்தி மணம் கமழ்கின்ற இறைவன் பெயரையே வைக்கிறோம். யாராவது, யாரையாவது கூப்பிடு கிறார்கள் என்றால் நம் காதில் ஆண்டவன் திருநாமம் விழுகிறது. முருகா, ராமா கோபாலா என்று குழந்தைகளை அழைக்கும் போது இறைவன் நினைவு நமக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையை நாம் வேறு எங்கே பார்க்க முடியும்? நாம் கேட்கிற ஒலிகளில் எல்லாம், காணுகிற பொருள்களில் எல்லாம் ஆண்டவனது நினைவு வரும்படியாகப் பெரியவர்கள் வைத்திருக் கிறார்கள். இந்த நாட்டில் இறைவனுக்கு நிவேதனம் பண்ணும் வழக்கம் இருக்கிறது. நாம் உண்பதை ஆண்டவன் நினைவோடு உண்ண வேண்டுமென்று வைத்திருக்கிறார்கள். ஆண்டவனுக்கு நிவேதனம் செய்கிறபோது அது பிரசாதமாகிறது. அவன் நினைவோடு உண்ணுகிறபோது பக்தி வருகிறது. நம் நாடுதான் சமையல் கலையையும்,சமயக் கலையையும் இணைத்து வைத்திருக்கிற நாடு. 'ப்ரூட் சாலட்' (Fruit Salad) என்று சொல்கிறேன். அதை எங்கே சாப்பிட்டோமோ அந்த உணவுச் சாலையின் நினைவு வரும். ஆனால் பஞ்சாமிருதம் என்று சொல்கிறேன். அதுவும் இனித்த பண்டந்தான். அதைக் கேட்டவுடன் வாயில் நீர் ஊறும். என்றாலும் உடனே நமக்குப் பழனியாண்டவன் நினைவு வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கிற இந்துக்கள் மாத்திரம் அல்ல; முஸ்லிம் களுக்கும் பஞ்சாமிருதம் என்றால் பழனியாண்டவன் நினைவு வரும். இந்துக்களானால் ஒரு கும்பிடு போடுவார்கள். மற்றவர்கள் போட மாட்டார்கள். அதுதான் வித்தியாசம். முருகனிடத்தில் முறுகிய பக்தி உடையவர்களானால் கண்ணில் நீர் வரும். இப்படியே, புளியோதரை என்று சொன்னால் அது இன்ன பண்டம் என்ற நினைவுக்கு வரும் முன்னால் திருமால் நினைவு வந்து நிற்கிறது. கொழுக்கட்டை என்றால் விநாயகப் பெருமான் நினைவு வருகிறது. தேனும் தினைமாவும் என்றவுடன் வள்ளிமணவாளனின் நினைவு வருகிறது. இப்படி உணவுப் பொருள்களில் இறைவன் நினைவு உண்டாகும்படியாக இந்த நாட்டில் வைத்திருக்கிறார்கள்.