பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

முடிவுரை

என் வேட்கையே!


நீ இவ்வளவு தாமதமாக வந்து இவ்வளவு
விரைவாகப் புறப்பட்டு விட்டாயே!

நீ வந்தபோது இனிமேல்தான் என்
வாழ்க்கை தொடங்கப் போகிறது என்று
எண்ணினேன்.

நீ ‘போய் வருகிறேன்’ என்று நீ உன்
வாயினாலேயே சொன்னதும் நான் என்றோ
இறந்துவிட்டதாக எண்ணினேன்.

நீ வந்தபோது என் வாழ்வுக்கு முன்னுரை
எழுத வந்திருக்கிறாய் என்று கருதினேன்;
நீயோ முடிவுரை எழுத வந்திருக்கிறாய்.

நீ பறக்கப் பார்க்கிறாய்; நான் கூண்டுக்குள்
அடைபட்டு நிற்கிறேன்.

என் வேதனை உன் விழிகளை நனைக்கிறது.

அந்தப் பழைய படகின் பக்கம் நின்று
கொண்டு இதழ்கள் நடுநடுங்க “நீங்கள்
நன்றாக இருக்க வேண்டும்”
என்று வாழ்த்துகிறாய்.

இது என்ன பேதைமை?
நான் இருந்தால் அல்லவா
நன்றாக இருக்க முடியும்?