பக்கம்:கனிச்சாறு 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 கனிச்சாறு – முதல் தொகுதி

மாணவரை வேண்டினோம்; மற்றவரைக் கால்பிடித்தோம்!
நாணமிலா மக்களுக்கு நல்லமறம் பாடிநின்றோம்!
வீணவரே இந்நிலையில் பெண்டிர் வெகுண்டெழுந்தால்
தூணவரே ஆனாலும் நுண்துரும்பாய்ப் போவார்காண்!
பூணுதியே வெல்பெருமை! பூங்கண்ணே நீவிழிப்பாய்!
சேணுயர்ந்த குன்றின்மேல் செந்தமிழின் சீர்பொறிப்பாய்!
நாணம் ஒதுக்கிடுவாய்! அச்சம் நசுக்கிடுவாய்!
கோணா தெழுந்துகுறை போக்கேலோ ரெம்பாவாய்! 17

புத்தம் புதிய புலிக்குருளை பெற்றெடுத்தே
கத்துங் கனிவாய் கமழ அமிழ்தூட்டி
முத்தம் பயிலும் முறுவல் மலரிதழீ!
செத்தார் தமிழர்; சிறுசோற்றுக் கங்காந்தார்!
கொத்துகின்ற வல்லடிமைச் சேற்றில் குமைந்துழல்வார்!
எத்தும் வடக்கர்க் கிணங்கிப் பணிபுரிய
ஒத்தார் உளங்கொண்டார்; ஓவாப் பிணிபட்டார்!
முத்தென் நகையாய்! முனைந்தேலோ ரெம்பாவாய்! 18

மஞ்சள் மதிமுகமும் மல்லிகைசேர் வார்குழலும்
செஞ்சாந்துப் பொட்டும் சிரிக்கும் எழிலோடு
வஞ்சி இராமுழுதும் வாள்விழியும் மூடியளாய்த்
துஞ்சி யிருக்கின்றாய்! செம்பரிதி தோன்றிற்றால்!
நஞ்சைத் தமிழ்மேல் தெளிக்கின்றார் நாடாள்வார்.
அஞ்சிக் குலைந்தார் அருந்தமிழர் ஆரணங்கே!
விஞ்சும் விரகால் விறல்மறந்து போகுமுன்னே
பஞ்சென்றே ஊதாய், பகையேலோ ரெம்பாவாய்! 19

சேல்விழியே! முன்னைச் செழும்புலவோர் ஆக்கிவைத்த
நூல்வழியே செந்தமிழின் நுண்பெருமை கண்டாய்காண்!
கோல்வலியால் - ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
வால்பிடிக்கச் செய்தே வடவர் கொடுமொழியை
மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்!
நூலிடையும் வாட நுதலும் நனிவெயர்ப்பக்
கால்குடைந்த கட்டில்மேல் கண்ணயர்ந்து தூங்குகின்ற
வேல்விழியே! இக்கால் விழியேலோ ரெம்பாவாய்! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/69&oldid=1419391" இலிருந்து மீள்விக்கப்பட்டது