பக்கம்:கனிச்சாறு 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


67  உயர்வடைதல் என்றோ ?

எதையெதையோ பேசுகின்றார்; செய்கின்றார்! நாட்டின்
இருண்டநிலை மறையவில்லை; தாழ்வகல வில்லை!
புதைகுழிகள்; ஏமாற்றுப் புனைவுகள்;பூ சல்கள்!
பூத்துவரும் முன்னேற்றம் தின்கின்ற நாய்கள்!
கதையெழுதி இழிவெழுதிக் கயமைவிளைக் கின்ற
கழிசடைகள்! மலக்குழிகள்! பணந் தின்னும் பேய்கள்!
-பதைபதைக்கும் நெஞ்சோடு நாட்டைநினைக் கின்றேன்.
பைந்தமிழர் வாழ்வுநிலை உயர்வடைதல் என்றோ?

நாகரிகம் எனும் பெயரால் நசித்துவரும் உள்ளம்!
நரிக்கூட்டம் ஆடுகின்ற அரசியல்கூத் தாட்டம்!
வேகின்ற வறுமையிலே சாகின்ற உயிர்கள்!
வெறித்தனங்கள்! அதிகாரம், பதவிக்கொண் டாட்டம்!
வாகுபோ கற்றநிலை! வழவழப்புப் பேச்சு!
வழிவழியாய் அரித்துவரும் குலசமயக் கூச்சல்!
நோகின்ற நெஞ்சோடு நாட்டைநினைக் கின்றேன்,
நொந்துவரும் எந்தமிழர் உயர்வடைதல் என்றோ?

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/144&oldid=1424765" இலிருந்து மீள்விக்கப்பட்டது