பக்கம்:கனிச்சாறு 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


83  செங்கதிர் புலர்ந்தது செந்தமிழ் வானில்!

எங்கும் தமிழர்கள் ஒன்றாய் இணைந்தனர்!
இன்னுயிர் உடல் - என நன்றாய்ப் பிணைந்தனர்!
‘பொங்கும் உணர்வினார் மொழியையும் இனத்தையும்
புதுக்கினர்' - என்றே கொட்டடா முரசம்!
பூத்தது வாழ்வெனக் கொட்டடா முரசம்!

உண்மைத் தமிழர்கள் உலகெலாம் பரந்தனர்!
ஒண்டமிழ்த் தாயினை உலாவர விட்டனர்!
திண்மை உளத்தொடு தீந்தமிழ் பரப்பினர்!
தீமைகள் அகன்றவென் றூதடா சங்கம்!
தீய்ந்தது மடமையென் றூதடா சங்கம்!

முன்னைத் தமிழர்கள் மொய்த்தனர் நாடெல்லாம்;
முங்கிய பழமைகள் முகிழ்த்தன புதுமையாய்!
அன்னைத் தமிழ்மொழி உலகெலாம் ஆர்ந்திட
அலர்ந்தது பொழுதென - அறையடா முழவம்!

அகன்றது பகையென - அறையடா முழவம்!
கீழ்த்திசை நாடுகள் கிளர்ந்தன தமிழால்!
கிளைத்தது தமிழ்க்குலம்; தீய்ந்தது கீழ்மை!
வாழ்த்திசை அளாவி எழுந்தது வானில்;
வளர்ந்தது தமிழென - மிழற்றடா யாழை!
வாழ்ந்தது நிலமென - மிழற்றடா யாழை!

செங்கதிர் புலர்ந்தது செந்தமிழ் வானில்!
செறிந்தனர் உலகெலாம் சேரபாண் டியனார்
எங்கணும் சோழனின் இனம்படை கொண்டது!
எந்தமிழ் வாழ்ந்ததென் றியம்படா குழலில்!
ஏர்ந்தனர் தமிழரென் றியம்படா குழலில்!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/176&oldid=1424804" இலிருந்து மீள்விக்கப்பட்டது