பக்கம்:கனிச்சாறு 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 157


தாய்மொழி, இன, நிலம் காத்திடும் கொள்கையில்
தடுக்கியும் வீழ்ந்திடற் கில்லை, காண் தமிழர்கள்!
வாய்மையும் தூய்மையும் வளைவுறா நேர்மையும்
வண்மையும் தொய்விலா முயற்சியும் தோய்தலால்,
நோய்மையும் பொய்ம்மையும் வஞ்சகச் செயல்களும்
நூறு நூ றாயிரம் வாய்ப்பறை முழக்கமும்
பேய்மையும் காழ்ப்புறும் உட்பகைக் கீழ்மையும்
பித்தரின் தூற்றலும் சித்தரைக் குலைக்குமோ?

-1977
 

97

தமிழர் முதலில் தம் இனம் காக்கவே!


எதனைக் காவா விடினும் தமிழர்
எந்தமிழ் மொழியையும் மரபையும் காக்க!
அதுதான் தமிழினம் அழியாது காக்கும்!
அதுதான் தமிழகம் இழியாது தேக்கும்!
புதிதாய்ப் பிறந்தவர் அனைவரும் உலகில்
புல்லிய தம்மொழி, இனநலம் காக்கையில்
எதுதான் தோன்றிய காலம்என் றறியா
எந்தமிழ் இனநலம் காப்பது தவறா?

அவரவர் மொழிதான் அவரவர் இனத்தை
அழியாமற் காக்கும் ஆணிவேர் ஆகும்;
அவரவர் மொழியை அவரவர் இனத்தை
அழியாமற் காக்கத் தமிழை அழிப்பதா?
எவரெவர் மொழியும் இனமும் வாழ
எருவாய் உழைத்தே தமிழினம் வீழ்வதா?
தவறாது தமிழர் தம்மொழி பேணுக!
தாழாமல் முதலில் தம் இனம் காக்கவே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/193&oldid=1437305" இலிருந்து மீள்விக்கப்பட்டது