பக்கம்:கனிச்சாறு 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


145

இருப்பவர் கலைஞரே
வடபுயல் சுவர், அவர்!


நெருப்பினில் தமிழினம் வெந்துகொண் டுள்ளது;
நேற்றைய வரலாறு மறைந்துகொண் டுள்ளது!
தெருப்புறம் தமிழர்க்குள் கூச்சலும் குழப்பமும்!
தேர்தலில் வெல்பவர் யார் - எனும் போட்டிகள்!
உருப்பெறும் வகையினில் ஒருவரும் இல்லைதான்!
உண்மையும் நேர்மையும் உலவிடா நிலைமைதான்!
இருப்பினும் கலைஞரே தமிழினம் காப்பவர்!
எரிகின்ற கொள்ளியில் எதிரிக்கு நெருப்பவர்!

அரசியல் விரகரே அனைவரும்; உண்மைதான்!
ஆட்சிக்கு வந்த பின் மாறுவார்! மெய்ம்மைதான்!
உரசிப் பார்த்திடில் ஒருவரும் இல்லைதான்!
ஊரடி கொள்ளையில் உலைவேகும் காட்சிதான்!
வரிசையை அளந்திடில் வாய்பேச்சுக் காரர்தாம்!
வந்தபின் ஆட்சிக்கு வருவாயே கொள்கைதான்!
முரசொலிக் கலைஞரே, இருப்பினும், மேலவர்!
முத்தமிழ் எதிரிக்கு என்றுமே வேல், அவர்!

இனநலம் காப்பதாய் எல்லாரும் சொல்கிறார்!
இனிமைப் பேச்சினில் எல்லாரும் வெல்கிறார்!
மனநலம் இருந்திடில் அல்லவோ மக்களின்
மாண்பினைக் காத்திட எண்ணுவர்! தமிழரின்
முனைநலம் யாவுமே பறிகொண்டு போயினர்!
முன் நிலம் மீட்பதில் எவருமே முனைந்திலர்!
இனநிலை உணர்ந்ததைக் காப்பதற் கெவருளர்?
இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர் - அவர்!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/252&oldid=1437459" இலிருந்து மீள்விக்கப்பட்டது