பக்கம்:கனிச்சாறு 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  229


செயலலி தாவுடைக் கொழுவுடலும் ஒருநாள்
சிறையிருந் தாலுமே உருகிவிடும் மறுநாள்!
கயவரே என்னினும் மாந்தர்கள் அன்றோ?
கனிவோடு நடத்தினால் திருந்துவார் அன்றோ? (இருந்து)

மனநோயில் விழுந்தவர், மற்றவர்க்கே என்றும்
மாறுசெய் வம்பர்கள், கொள்ளையர்கள், கொலையர்,
முனம்பகை வெறியினர்-இவர்களுடன், அரசில்
முரண்படு வோரையும் ஒன்றென எண்ணுவதா? (இருந்து)

அரசியல் பேசுவோர் கொடுமையா ளர்களா?
ஆட்சியில் உள்ளவர் நடுநிலையா ளர்களா?
உரசி டாமலே கருத்தோடு கருத்தை,
‘உண்டு காவலர் படை’யெனும் மமதையர் (இருந்து)

சிறையினுள் வைப்பதால் ஆளுமையின் குறைகள்
சீராகிப் போகுமா? ஆளுபவர் நினைக்க!
முறையாகக் கருத்தொடு கருத்தெதிர் வைத்து
முடிவு காண் பதனாலே எவர்க்கென்ன தொல்லை? (இருந்து)

அவரவர் கருத்தினை ஆய்வுசெய் யாமல்,
ஆள்பவர் கருத்தேதான் சரியென்று கொண்டால்
தவறினைத் தவிர்த்திட இயன்றிடுமோ, சொல்வீர்;
தவறேதான் என்றாலும் சிறைசெய்தல் தீர்வோ? (இருந்து)

அறிவியல் மிகுவளர் காலம் இஃதன்றோ?
ஆள்பவர்க் கெதிர்சொல்வார்க் கிடர்தரல் நன்றோ?
குறிவைத்தே அவர்களைக் கொடுஞ்சிறை தள்ளல்
கொடுமையினும் கொடுமை! அதை அரசுசெவி கொள்க! (இருந்து)

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/265&oldid=1437475" இலிருந்து மீள்விக்கப்பட்டது