பக்கம்:கனிச்சாறு 3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  79

அடுதலைச் செய்க! உண்மை
ஆர்வத்தால் உணர்வால் பூக்கும்
விடுதலை! அதைநி னைத்தால்
மண்ணன்று; விண்நம் கையில்! 25

-1975


72  சிங்கள இனமே! சிங்கள இனமே!

எந்தமிழ் இனத்தார் இந்நில வுருண்டையில்
எந்தப் பகுதியில் இருந்தாலும் - அவர்
சொந்தம் நமக்கே! நாமவர்க் கென்றும்
சொந்தம் சொந்தம் என்றுரைப் போம்!
உந்தும் உணர்வும் உறவும் அவர்பால்
உண்டுண் டென்றே முழக்கிடுவோம்! - அவர்
சிந்தும் கண்ணீர், செந்நீர் எதற்கும்
சீறி எழுந்தே வழக்கிடுவோம்!

ஈழத் தமிழ்க்குலம் சிங்கள ரால்உறும்
இடர்கள், இழிவுகள் நினைந்திடுவோம்! - அவர்
வாழத் துடித்தும் வறுமைப் பட்டும்
வடிக்கும் நீரில் நனைந்திடுவோம்!
ஆழக் கடலும் அரசுப் பிரிவும்
அவர்க்கும் எமக்கும் தடையில்லை! - எம்
வேழப் பெருந்தோள் எழுந்தால், தமிழர்
வெற்றி நடைக்கெதிர் நடையில்லை!

சிங்கள இனமே! சிங்கள இனமே!
சிறுமை செய்தாய் தமிழினத்தை!... நீ
இங்குள தமிழரை எண்ணிலை போலும்!
எங்குள ராயினும் செந்தமிழர்
பொங்குணர் வுக்கடல்! புகையும் எரிமலை!
போழ்வாய் அரிமா! பொருகளிறு!.... அவர்
வெங்குரு தித்துளி ஒன்றிருக் கும்வரை
வீழ்ச்சியி லாதது தமிழினமே!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/108&oldid=1424599" இலிருந்து மீள்விக்கப்பட்டது