பக்கம்:கனிச்சாறு 3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81


74  ஒன்றுகாண் உலகத் தமிழினம்!


ஒன்றுகாண்; உலகத் தமிழினம்! இன்றே
உறக்கந் தவிர்த்தே எழுந்தது காண்!
நன்றுகாண் அதனின் நடையும் திறனும்;
நாட்குநாள் வலிந்தே பொலிவுறும் காண்!
அன்றுகாண் அரசும் அழிந்தது; வரலா
றழிந்தது; பெருந்திறல் அழிந்தது காண்!
இன்றுகாண், எழுந்தது புரட்சியும் புதுமையும்!
ணைந்தது தமிழினம் முனைந்தது காண்!

குன்றுகாண்! மலைகாண்! கடல்காண்! காடுகாண்!
குன்றா உணர்வினில் மறைந்தன காண்!
நின்றுகாண்! சென்றுகாண்! எங்கும் தமிழினம்
நிமிர்ந்தது நிமிர்ந்தது சோர்விலை காண்!
கன்றுகாண் ஆயினும் களிறுகாண் இளைஞர்!
கதிர்விழி நோக்கினர் அதிர்நடை காண்!
வென்றுகாண் திரும்புவர்! தமிழ்நிலம் மீட்குவர்!
வீழ்ச்சியும் தாழ்ச்சியும் இனியிலை காண்!

பழம்பெரு ஞாலம்; பழம்பெருந் தாயினம்!
பழிப்பிலும் இழிப்பிலும் கிடந்தது காண்!
இழந்ததிங் குரிமை; இழந்தது பெருமை!
இழப்பிலை இனியது வளம்பெறல் காண்!
செழுந்தமிழ் வளர்க! சிறப்புற் றிலங்குக!
செந்தமிழ் இனமும் செழித்திடுக!
எழுந்தன புலிகள்! எழுந்தன கரிகள்!
எங்கும் விடுதலைக் கொடிநடவே!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/110&oldid=1424601" இலிருந்து மீள்விக்கப்பட்டது