பக்கம்:கனிச்சாறு 3.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


75  புதுச்சூள் உரைப்பீர்!

'மத்தியூ' என்னும் மதியிலாக் கேடன்
பத்தரை மாற்றுப் பசும்பொன் மணியை
மங்கையர்க் கரசியாம் மறக்குல மாதை
எங்கள் தமிழின இழிவைப் போக்கப்
பொங்கி யெழுந்த பொற்றொடி மகளை
மங்கா வீரத்து மாமணித் தாயை
இளைக்கா நாவின் எம்முடன் பிறப்பைச்
சளைக்கா உரையைச் சாயாத் துணிவைக்
கற்பின் கொழுந்தைப் பொற்புறு செல்வியை
வெற்பின் உறுதியை வீரத் திருவைச் 10
செங்களம் ஆடிடும் செந்தமிழ் மறத்தியை
மங்கையர் ஏந்தும் மகளிர் தலைவியை
மயலுறப் பாடும் மறத்தமிழ் இசையை
வைரவெண் மணியை வரிப்புலிப் பேடைக்
கனலுறப் பிளிரும் களிற்றுப் பிடியை
அனலுறப் பேசும் ஆர்வ அன்னையை
அறம்பாடி வந்த அருந்தமிழ் அணங்கைப்
புறம்பாடி யெழுப்பும் பூவையர் கொழுந்தைக்
கணவர் மருங்கில் கையொடு கையாய்த்
துணைவி யாகித் தோளொடு தோளாய் 20
நிழல்போல் என்றும் நெஞ்சொடு நெஞ்சாய்
அழலென வெழுந்த அரிமாப் பிணவைப்
பழித்தும் இழித்தும் பதறா நாவொடு
அழித்துப் பேசினான் என்னு அழலுரை
செவிமடுத் தின்னும் செந்தமிழ் மறவர்
அவிசோ றுண்டிங் கமைந்திருப் பாரோ?
கவிழ்ந்த தலையொடு காத்திருப் பாரோ?
அவிழ்ந்த நெஞ்சோ டழன்றிருப் பாரோ?
குலப்பிரிவு உதறிச் சமயக்காழ்ப் பறுத்து
மலைப்பெருந் தோள்கள் மலியச் சிலிர்த்தே 30
பொங்கி எழாரோ? பூவையர் குலத்தின்
குங்குமக் குருதி கொப்பளி யாரோ?
நற்றாய் மங்கையர்க் கரசியின் கழுத்துப்
பொற்றா லியின் மேல் புதுச்சூள் உரைத்துத்
தனித்தமிழ் ஈழம் தாங்க
முனித்தெழுந் தின்றே முனைக தமிழரே!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/111&oldid=1424602" இலிருந்து மீள்விக்கப்பட்டது