பக்கம்:கனிச்சாறு 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103


94  இனம், நிலம் மீட்க இணைந்து செய்க!


அட! அட! தமிழனே! நீ
ஆர்க்கிறாய்; வேர்க்கி றாய்; பின்
ஆரேனும் சவுண்டன் வந்தே
அடக்கினும் அடங்கிக் கொள்வாய்!
கெடக்கெடச் சுவையும் கண்டாய்!
கீழ்மை,உள் ளரிப்பும் கொண்டாய்!
கேடுகள் உணர்வாய்; ஆனால்,
கெடுகிறாய்; கெடுகின் றாயே!
சுடச்சுட ஒளிரும் என்று
சொல்வார்கள் பொன்னை! நீயோ
சுட்டதும் கரியாய்ப் போவாய்!
சுருண்டிடும் அட்டை யாவாய்!
'படப்பட அறிவு வீறும்'
பட்டறி வுரை, ஈ தென்பார்!
பயனிலை உன்னி டத்தில்!
படப்படப் பட்டே போனாய்! 1

இலங்கையில் எழுச்சி கண்டே
இங்குள்ள தமிழர் எல்லாம்
இதோ,நம் இனத்திற் கென்றே
எழுந்ததோர் ஆட்சி என்றார்!
துலங்கிடும் தமிழர் வாழ்க்கை
தோன்றிடும் உரிமை என்றார்!
தோன்றிய எழுச்சி நீண்டு
தொடர்ந்தது! தொடர்ந்த தந்தோ!
கலங்கினர், உடல், உள்ளங்கள்!
கதறினார்; கருகிச் செத்தார்!
கணக்கிலாத் தமிழர் கூட்டம்
கரைந்தது கரைந்த தந்தோ!
நலங்கிளர்ந் தெழும்என் றே,நாம்
நாட்குநாள் காத்தி ருந்தோம்!
நண்ணிய திறுதி நாளும்!
நரித்தனம் வென்ற தையா! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/132&oldid=1424624" இலிருந்து மீள்விக்கப்பட்டது