பக்கம்:கனிச்சாறு 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


101 
அனைத்துத் தமிழர்க்கும்
தலைவனாய் நின்றான்!


அவன்தான் தமிழின வீரன்! - அற்றை
நிலந்தரு திருவில் மாறன்! - கரிகாற்
சோழன்! இமய நெடுஞ் சேரன்! (அவன் தான்)

சிவன், திரு மால் - எனச் செப்பிடும் முதல்வன்!
சேண்நெடுந் தமிழினப் புதல்வன்! - கடும்பெருந்
தவம் செய்து தமிழ்த்தாய் பெற்றநல் மறவன்!
தரையெலாம் சென்றுவாழ் தமிழர்க்கு உறவன்! (அவன் தான்)

கதிர்க்கையன் எனும்பிர பாகரன் அவன்தான்!
காளையர் வழிபடு தலைவனும் அவன்தான்!
புதிர்க்கொரு புதிர்-அவன்! புரட்சியின் வடிவம்!
பூக்கின்ற விடுதலை விடியலின் படிவம்! (அவன் தான்)

நிலத்தினைக் குடைந்து - உள்ளே புகுந்து வாழ் வானோ?
நிலாவினில் சென்று - அவன் மறைந்து வாழ் வானோ?
புலத்தினை விடுவிக்கும் கோள், அவன் கோளே!
புறப்பகை வென்றிடும் தோள், அவன் தோளே! (அவன் தான்)

கார்த்திகை எனும்நளி மாதத்தில் பிறந்தான்!
காத்திடும் இனநலப் போரினில் சிறந்தான்!
ஆர்த்திடும் புலியெனக் களத்தினுட் சென்றான்!
அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்! (அவன் தான்)

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/145&oldid=1424638" இலிருந்து மீள்விக்கப்பட்டது