பக்கம்:கனிச்சாறு 3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


105 
வெட்கப் படுவதே நல்லது; அதனினும்
துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே !


உலகெலாம் பரவிய உயிர் தமிழ் இனத்தின்
நலமெலாம் மீட்கவும் நல்லரசு ஒன்றைத்
தமிழீ ழத்தில் தழையச் செய்யவும்,
இமிழாத விழியனாய் - இளைக்காத நெஞ்சனாய்
ஆர்க்கும் புலியென அன்றன்றும் புதுப் புதுப்
போர்க்களம் காணும் புரட்சி வேந்தனாய்ப்
பீடுற நிற்கும் பிரபா கரனை,
ஈடிலா மறவனை - எம்மினத் தலைவனை,
இனத்தோன்றல் ஒருவனை - எச்சில் சோற்றுக்கு,
மனச் சான்றைத் தின்ற மாகொடி யன்கள்
காட்டி கொடுக்கும் கயமையை என்னென்போம்?

கூட்டிக் கொடுக்கும் குடல்நிரப் பிகளே!
நமரின் நலம்பெற நனிவிரும் பாத
குமரி அனந்தக் கோடரிக் காம்புகளே!

பதவியும் பணமும் பல்லிளிப் புக்கே
உதவியாய் வருமெனில் உருகி நின்றே
கயிறு திரிப்பதே வாழ்க்கையாய்க் கருதி
வயிறு பிழைக்கும் வாழப்பா டிகளே!

மண்டிய அடிமை மயக்க உணர்வின்
திண்டி வனத்தின் இராமமூர்த் திகளே!
'போபர் சு' புகழ் இராசீவ் புளுகனை
மாபெரும் தலைவனாய் மதித்து வணங்கும்
மூப்பனார் போலும் மூங்கை உடல்களே!

ஆப்பினை அசைத்த அழிகுரங் குகளாய்ப்
பார்ப்பனச் செல்வியின் பாதத்தில் வீழ்ந்தே
ஊர்ப்பணக் கொள்ளைக்கு அமைச்சராய் ஒழுகி
எட்டி உதைக்க எங்கேயோ கிடக்கும்
மட்டிவீரப்ப இராசாரா மன்களே!

நீங்கள் அனைவரும் நெடுந்தமிழ் மரபின்
ஓங்கிய பிறவியைத் தாங்கிய தற்கே
வெட்கப் படுவதே நல்லது; அதனினும்
துட்கென உயிரைத் துறப்பதும் நல்லதே!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/149&oldid=1424642" இலிருந்து மீள்விக்கப்பட்டது