பக்கம்:கனிச்சாறு 3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

கனிச்சாறு மூன்றாம் தொகுதி

பாவலரேறு ஐயா அவர்கள் ஓராண்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கையில் எழுதப்பெற்ற பாடல் இது. அக்கால நெருக்கடிநிலைச் சூழலையும், அதனால் வெஞ்சிறையில் அடைக்கப்பட்டோர் நிலையையும் விளக்கி, அவற்றினின்று இந் நாடு உய்க என்கிறார் ஐயா அவர்கள்.

42. இப்பாடல் 1979-ஆம் ஆண்டு தாராபுரம், தமிழ்க்கலை மன்ற இந்தாம் ஆண்டு நிறைவு விழா மலரில் வெளிவந்தது. கட்சிகள், இயக்கங்கள் பலவாய் இருந்து எதுவும் தமிழின முன்னேற்றங்குறித்துத் தெளிந்த அரசியலோடு இயங்காமல் இருக்கிற சூழலில் ‘செய்யாத சமையலுக்குக் காத்திருக்காமல்’ தமிழ்நிலம் மீட்க ஒருவழியாய்ச் சிந்திக்க அழைக்கிறார் பாவலரேறு.

43. திருவள்ளுவரின் உருவச்சிலை கொண்ட படம் தாங்கிய தென்மொழி அட்டைப்பாடல் இது.

44. நெருக்கடி நிலைக்கால ஆட்சியில் இந்திரா பேராயத்தால் அடக்கப்பட்டு நசுக்குண்ட தி.மு.கழகம் மீண்டும் இந்திரா பேராயக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து தமிழின வீழ்ச்சிக்கு அடிகோலிய காலச்சூழலில் எழுதப்பெற்றது இப்பாடல்.

வந்தவர்க்கு வால் பிடித்து, சொந்த மொழி, இன நலத்தை விட்டுச் சோற்றுக்கு மண்டியிடும் தமிழனே ஏறுநடை போட்டு நட! எக்காளம் ஊதி நட என்கிறது இப்பாடல்.

45. இப்பாடலும் கடந்த பாடல் எழுதப்பெற்ற காலச் சூழலிலேயே எழுதப்பெற்றது. அக்கால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முதலில் ஒன்று சேர்வதாக இருந்து பின்னர், ஆளுக்கு ஓர் இந்தியக் கட்சிக்கு அடிமையாய்ப்போன போக்கை எண்ணித் திராவிடக் கட்சிகளின் தம்பியை அழைத்துப் பாடிய பாடல் இது. தலைவர்கள் மக்களைத் தனியே விடுத்திட்டச் சூழலில் வேகம் தளராமல், வெம்மை குளிராமல் வெற்றிக்கொடி நாட்ட வீர நடையில் படை கூட்ட அழைக்கிறார் பாவலரேறு.

46. ஆசிரியர் அவர்கள்தம் ஐரோப்பியச் சுற்றுச் செலவை முடித்துக் கொண்டு வந்தபின் வெளிவந்த தென்மொழி இதழின் அட்டைப்பாடல். உலகம் முழுதுமுள்ள தமிழரின் உரிமை உணர்வெழுச்சியைக் கண்டெழுதியது இது.

47. பாவலரேறு ஐயா அவர்களை முதல்வராய்க் கொண்ட உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும் உறுப்பியக்கமாய் இருந்து கூட்டப்பட்டது ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’. தமிழக அளவில் இம் முன்னணிச் செயற்பாடு வீறுகொண்ட நிலையில் இருக்கையில் தென்மொழியின் அட்டைப்பாடல் இது. தமிழுக்கும். பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து மொழி, இன, நாட்டு விடுதலையே என்கிறார் பாவலரேறு.

48. பஞ்சாபினும், அசாமிலும், நாகலாந்திலும், காசுமீரத்திலும், கேரளத்திலும் தேசிய இன எழுச்சிகள் நடந்து கொண்டிருக்கையிலும், தமிழகத்தில் தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணிவழிச் செயற்பாடு தொடர்ந்த நிலையில் எழுதப்பெற்ற பாடல் இது. எவ்வொரு விளைவும் ‘எல்லார்க்கும்’ என்று ஒவ்வொரு தேசிய இனமும் உயிர்த்துப் புரட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/19&oldid=1437705" இலிருந்து மீள்விக்கப்பட்டது