பக்கம்:கனிச்சாறு 3.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5


விந்தக் குமரியிடை விரிந்திட்ட தமிழ்நாட்டு
வினைதமை மற்ற நாட்டு
வினையாளர் கேட்டக மகிழ்கின்றா ரெனக்கேட்டு
வீறுகொள் நாளெந் நாளோ? 1

சொந்தத் திருநாட்டின் மக்களிடை நோநீங்கிச்
சோர்வற் றிருந்து வாழ்வில்
சுறுசுறுப் போடுபல விறுவிறுப் பானமுறை
சுடர்விடும் நாளெந் நாளோ?
வந்தித் திருநாட்டின் எழில்சுரண்டி வாழ்கின்ற
வடநாட்டின் எலிகள் நீங்கி
வாழுவதும், ஆளுவதும் இந்நாட்டு மக்களென
வகைசெய்யும் நாளெந் நாளோ? 2

ஊர்ப்பெயருந் தெருப்பெயரும்
உயர்ந்ததமிழ்ப் பெயராக
உண்டாகும் நாளெந் நாளோ?
உலகத்து மக்களெலாம்
ஒருமொழியாய்த் தமிழ்மொழியை
உணரும்நா ளெந்த நாளோ?
பார்க்கு ளெங்கும் இந்நாட்டுப்
பண்டைத்தமிழ் நூல்களையும்
பயிலும்நா ளெந்த நாளோ?
பலகலைக ளோடுதமிழ்க் கலைகளையும் வைத்துலகு
பயனெய்தும் நாளெந் நாளோ? 3

ஊர்க்குவூர்த் தமிழ்ப்புலவ ரோடுபலர் கூடிமகிழ்
வெய்துநா ளெந்த நாளோ?
உணவில்லை; கஞ்சியில்லை; உடையில்லை என்பதெல்லாம்
ஒழியுநா ளெந்த நாளோ?
ஆர்த்தெழுவீ ரந்நாளை நோக்கித் தமிழ நாட்டாரே!
அஞ்சாது வீறு கொள்வீர்!
ஆள்வதுநாம்; அன்றியொன்றாய்
மாள்வதுதான் நன்றெண்ணி
அரசியலார் நோக்கி வாரீர்! 4

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/34&oldid=1424525" இலிருந்து மீள்விக்கப்பட்டது