பக்கம்:கனிச்சாறு 3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9


7  அமைச்சருக்கு வேண்டுகோள்!

 
மழைக்கென்றும் வெயிற்கென்றும் கூரை யிட்டோம்!
மறைவுக்குச் சுற்றிநெடுஞ் சுவர்கள் வைத்தோம்!
அழைக்கின்ற தென்றலிளங் காற்றுக் கென்றே
அருகருகிற் பலகணிகள் அமைத்தோம் வீட்டில்!
உழைக்கின்றார்; உண்கின்றார் அண்டை வீட்டார்!
ஒருபொருளும் பிறர்பொருளைத் திருடா வாறு
பிழைக்கின்றார்; எனினும் தம் வீட்டிற் கென்று
பெருங்கதவை வைக்கின்றோம்; தாழ்வைக் கின்றோம்! 1

"கதவைநீ ஏன்வைத்தாய்? நாங்க ளெல்லாம்
கள்ளரென்ற தீநினைவோ? சுவரேன் வைத்தாய்?
உதவெனக்கு நீ! உனக்கும் உதவு கின்றேன்!
உன்வீடும் என்வீடே! எனதுன் வீடே!
புதுமுறையாய் வாழ்ந்திடுவோம்” என்று நாம்போய்ப்
புதுவீட்டுக் காரரிடம் கேட்டு விட்டால்,
பதிலுரையா கிடைக்கும்? நம் கைகால் போகும்,
பல்விழும்;நம் உடலெலும்பு நொறுங்கிப் போகும்! 2

பிரிவுமனப் பான்மையென்றே அமைச்ச ரெல்லாம்
பிழையாகப் பேசுகின்றார், தமிழ்நா டென்றால்!
பரிவோடு கேட்கின்றோம்; உம்மைப் பெற்றாள்
பழந்தமிழ்த்தாய் ஒருத்தியெனில், தமிழ்த் தந்தைக்கே
கருவான துண்மையெனில், கருத்தைச் சொல்வீர்!
கன்னித்தமிழ் வடமொழியால் தீங்கு றாதா?
உருவாகும் தமிழ்நாட்டுப் பற்று தீதா?
உழைத்துழைத்துப் பிறர்க்கிட்டு வாழ்தல் நன்றா? 3

தமிழ்நாடு தமிழர்க்கென் றார்த்தல் தீதா?
தாங்காத கொடுமைபல தாங்கல் நன்றா?
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வாழல் தீதா?
தாயென்றே அதைநினைத்துப் போற்றல் தீங்கா?
அமிழாத சிறப்பதன்பால் இருத்தல் பொய்யா?
அமைச்சர்தமைக் கேட்கின்றோம்! வரும் நூற்றாண்டில்
உமிழாத நிலைபெறுவீர்! ஒளியாய் வாழ்வீர்!
ஒண்டமிழ்க்குத் துணையாவீர்! அறங்காப் பீரே! 4

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/38&oldid=1424537" இலிருந்து மீள்விக்கப்பட்டது