பக்கம்:கனிச்சாறு 3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  13


13  என்னைத் தூக்கிலிடுங்கள்!


வரிசை கெட்ட அரசினர்க் கின்னும்
உரைக்க வேண்டுவ தொன்றுண் டென்னில்
என்னைத் தூக்கில் இடுங்கள் என்பதே!
அன்னை மொழியைக் காத்திட அதுதான்
நடந்திட வேண்டும் என்னின் நடக்க!
கடந்த நாளெலாம் கடவா நாட்களே!
வாழ்ந்த பொழுதெலாம் வாழாப் பொழுதே!
வீழ்ந்த தமிழினை வீழ்த்திய இந்தியை
ஓட்டுதற் கென்றன் உயிர்தான் ஈடெனில்
தீட்டிக் கொள்க கைவாள்! இதோ, தலை! 10

வடவர் பிடிக்கு வால்பிடிப் போரை
உடல்வே றாக உயிர்வே றாகச்
சிதைப்பேன் என்று முழக்கினால் தூக்கெனின்
பதைப்பிலா தென்றன் தலைகொய் திடுக!
மயர்விலாத் தமிழின் மானங் காத்திட
உயிர்தான் விலையெனில் இதோ! உயிர்! கொய்க!
'பத்தவச் சலங்'கள் வயிறு நிறைந்திட
இத்தனை தமிழர் ஈகுவீர் உயிரெனில்
என்னுயிர் முன்னர் இளைப்பா றட்டும்;
என்ற முடிவில் இதனை உரைப்பேன்; 20

தமிழும், தமிழரும் பிழைப்ப தென்னில்
தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது!
'இந்தியா வேண்டும் இந்தி வேண்டா' என்பதும்,
'குதிரை வேண்டும் குதிரைப்பீ வேண்டா' என்பதும்.
ஒப்பினும் பொருளினும் ஒன்றே யாகும்!
தப்பென மறுப்பார் தனிமேடை வருக!
இந்தியி னாற்றான் இந்திய மக்கள்
முந்தைய பிரிவுகள் முற்றும் மறந்தே
ஒற்றுமைப் படுவது கூடும் என்பிரேல்
இற்றை இந்தியா இன்றே அழிக! 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/42&oldid=1424533" இலிருந்து மீள்விக்கப்பட்டது