பக்கம்:கனிச்சாறு 3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

25 உருப்படியாகாதடா!


உருப்படி யாகாதடா - தமிழகம்
உருப்படி யாகாதடா - தமிழா
உருப்படி யாகாதடா!

தெருப்படி யிறங்கினால் குலமதத் திருட்டுகள் ;
திரிவோர்தம் வாயெலாம் அரசியல் புரட்டுகள் !
நெருப்படி வாழ்க்கையில் ஏழையர் வாட்டங்கள்!
நிலையற்ற போக்குகள்! சோற்றுத்திண் டாட்டங்கள்! (உருப்படி)

கயவரும் கள்வரும் காசடிக் கின்றார்;
கரவினால் தொண்டர்கள் போல்நடிக் கின்றார்!
நயமிகு நாடக விளம்பர உரைகள்!
நாளுக்கு நாள் மிகும் ஒளிப்படத் திரைகள் ! (உருப்படி)

அறிஞர்கள் வறுமையில் வாடுவர் இங்கே;
அறிவு நூல் செய்வதும் உரைப்பதும் எங்கே?
நெறிகளும் முறைகளும் செல்வர்கால் செருப்பு;
நேர்மையர் வாழ்க்கையோ மெழுகு கீழ் நெருப்பு! (உருப்படி)

அரசியல் விரகுகள் ஆயிரங் கோடி!
ஆரவா ரங்கட்கே மாடிமேல் மாடி!
முரசறைந் தென்பயன் விடுதலை நாடி?
முனைபவர் குலைவதோ நாட்குநாள் வாடி? (உருப்படி)

பெண்டிர்க் கிலைபெண்மை; ஆண்கட்கே தாண்மை?
பிழைப்பதற் கெனில்விடு வார்மன நாண்மை!
தொண்டுசெய் வார்வினை, செயல்முற்றும் பொய்ம்மை;
தொகைவரு மென்னிலோ புதைப்பாதம் மெய்ம்மை! (உருப்படி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/51&oldid=1424542" இலிருந்து மீள்விக்கப்பட்டது