பக்கம்:கனிச்சாறு 3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

27  நாளையே விடுதலை!


எழுக தமிழனே! இனநலம் கருதுக!
கொழுந்துவிட் டெரியும்உன் குலைக்கனல் பெருக்குக!
உன்றனை விடுதலைக் கொப்புவித் திடுக!
பின்வரும் தமிழருன் பெற்றியைப் புகழ்வர் !
வடக்குக் கதவினை இறுக்கிப் பூட்டுக!
இடக்குசெய் ஆரிய இனப்கொழுப் புருக்குக!
இழிவுக்குத் தீவை! ஏற்றப் படியமை!
அழிவுசெய் அடிமைத் தளைகளை உடைத்தெறி!
உணர்வுகொள்! உறுதிகொள்! உயிரைப் பணயம்வை!
தினவுத் தோள்களால் வெற்றியைத் திருப்பு!
நாளையே விடுதலை நண்ண,
காளையே! களிற்றின் கன்றே! கனல்கவே!

-1969


28  விடுதலை மருந்து!

ஊட்டப் பெறாத உணர்வொடு விலங்கும்
பறவையும் ஒற்றுமை யுறுங்கால்
மாட்டப் பெறாது வலிந்துநாம் புகுந்து
மனங்கெட மதம்,குலம் என்னும்
பூட்டப் பெறாத சிறைகளி லிருந்து
புழுங்குற அறிவெலாம் புதைந்து
கூட்டப் பெறாமல் சிதைவுறும் நமக்கே
கூடுமோ விடுதலை அமிழ்தே!

கத்தப் பெறாமல் குழவிவாய்க் கமிழ்துங்
கனிவுறத் தாய்தரல் உண்டோ?
கொத்தப் பெறாமல் பைங்கிளி வாய்க்கே
குலைக்கனி சாய்தலும் உண்டோ?
மொத்தப் பெறாமல் கவர்பொருள் கள்வன்
முன் வரத் தருதலும் இயல்போ?
வித்தப் பெறாமல் விளையுமோ நமக்கே
விடுதலை எனும் உயிர் மருந்தே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/53&oldid=1424544" இலிருந்து மீள்விக்கப்பட்டது