பக்கம்:கனிச்சாறு 3.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  27


இதுகாறும் எத்தனையோ தலைவர் வந்தார்;
கூட்ட மிட்டார்;
"தோழர்களே! அரிசி,புளி, மிளகாய் எல்லாம்
குதிகாலில் இறக்கை கட்டி,
விலையேறிப் பறந்த" தென்று
கூச்சலிட்டார்; மறியலிட்டார்; 'குறைப்பேன்' என்றார்!
அதிகாரம் கைக்கு வரும்;
அப்படியே செருக்குவரும்! இயங்கிவரும்! ஆனாலும்
உழைப்போர் மட்டும்
மிதிகாலில் நசுக்குண்ணும் புழுப்போலத்,
துடிக்குநிலை இருந்தபடி யிருந்துவரும்!
எண்ணிப் பார்ப்பீர்!

-1971



31  வங்காளம் தரும் பாடம்!


வங்காள மக்கள்!
மங்காத உணர்வினர்!
பொங்கிப் பாய்ந்தெழும் பூரித்த தோளினர் !
மண்ணைத் தாயென வணங்கும் மரபினர்;
புண்ணைத் தழும்பெனப் போற்றும் மறத்தினர்;
மொழியை உயிரென முழுங்கும் மாண்பினர்;
அழியா இலக்கியம் ஆர்க்கும் அறிவினர்,
பழிவரின் உள்ளம் பதறுமா னத்தினர்!
இழிவெனின் உயிரையும் எள்ளும் இயல்பினர்;
ஓவியக் கலைஞரும் உருவியத் தச்சரும்
பாவியப் புலவரும் படைத்தலை மறவரும் 10
நாட்டியக் கூத்தரும் நல்லிசை வாணரும்
ஈட்டிய பெரும்புகழ் கூட்டிய இனத்தினர்!
இந்திய மக்கள் யாவரும் ஆங்கிலர்
சிந்திய சோற்றுப் பருக்கையைப் பொறுக்கி
உண்டு களித்தே உறங்கிடும் பொழுதில்
பண்டைப் பெரும்புகழ் மீட்கும் பான்மையில்
முந்தி முந்தி முரசம் முழக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/56&oldid=1424546" இலிருந்து மீள்விக்கப்பட்டது