பக்கம்:கனிச்சாறு 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  29

மாந்தரின் பெருமை மண்ணாய்ப் போகும்!
மறமும் பேய்மையும் கொண்ட மக்களின்
அறமும் கல்வியும் அரற்றலாய்த் தெரியும்!
வல்லா சென்றும் நல்லா சென்றும்
சொல்லப் படுவன சுடுகா டாகும்!

சமயப் பெருமைகள் சாணியாய் நாறும்!
அமைந்துள கோயில்கள் ஆட்டங் கொடுக்கும்;
கோபுரப் பெருமை குப்பைமே டாகும்;
காப்புடைக் கடவுள் எனக்கை யெடுத்துக்
கும்பிடும் பெருமைபோய்க் குழவிக் கல்லென 60
வெம்பிக் கூறிட வேண்டி யிருக்கும்!
அத்தகு நிலைக்கு,அதை ஆளாக் கியவோர்
தித்திருக் கனை, (பேர் சாற்ற நாகூசும்),
இன்னுமிவ் வுலகமும் இதிலுறை மக்களும்,
(மண்ணாங் கட்டி! மக்களாம் மக்கள்!)
விட்டுவைத் துளரெனில், வேறென்ன சொல்வது?
சட்ட மன்றமாம்! சட்டங் காக்கும்
அறநெறி மன்றமாம்! ஆட்சியாம்! அரசாம்!
திறமையாம்! அமைச்சராம்! சென்னையாம் தில்லியாம்!
பாராளு மன்றமாம்! படைபட் டாளமாம்! 70
நேரான பொருளும் இவற்றிற் கென்னெனில்
ஊரை,ஏ மாற்றி உலையில் இடுவதே!

இவ்விடத் தில்தான் எண்ணுதல் வேண்டும்;
ஒவ்விய கொள்கையால் உரங்கொண்ட தமிழர்
அங்கிங் கொருவ ராகிலும் இருப்பர்;
இங்கிவை அவர்செவிக் கேறும் என்றுதான்
பாட்டடி கொண்டுநான் பதற எழுதுவேன்!
காட்டடி அடிக்கும் அரசியல் காரர்க்கு
எல்லா அடிகட்கும் 'இடையில் அடிக்கும்'
பொல்லாக் 'கையடி' ஒன்றே பொருளாம்! 80
இதுவும் கிடக்க,
இற்றைநாள் இளைஞர்
புதுவுணர் வெய்திப் புரட்சியென் றார்ப்பர்;
விடுதலை யே, நாம் வேண்டுவ தென்பர்;
கொடுதலை என்னினும் கொடுக்கமுன் வருவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/58&oldid=1424548" இலிருந்து மீள்விக்கப்பட்டது