பக்கம்:கனிச்சாறு 3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  31

இத்தகு நிலையில் எந்தமிழ் நாட்டில்
புத்துருக் கொளுமொரு புரட்சியைத் தோற்றினால்
என்ன விளையுமென் றெண்ணிப் பார்க்கிறேன்;
மின்னலொன் றென்னுடை மேனியில் பாய்ந்தது!
மந்திரம் அன்று! மாயமும் அன்றே!
இந்திரா காந்தி யாகியாக் கானாய்
மாறி நந்தமிழ் மக்களை மாய்த்தால்
வேறுயார் நமக்குத் துணை வர விரும்புவார்?
எண்ணிப் பார்க்கிறேன்.....!
இந்திரா வெனுமொரு
பெண்ணிற் கத்தகு துணிச்சல் பிறக்குமா? 130
பிறப்பினும் பிறக்கா தாயினும் நம்முடைச்
'சிறப்புத் ' தமிழரைச் சிறிதே நினைக்கிறேன்;
வங்காளர் துணிவு தமிழர்க்கு வருமா?
வங்காளர் ஒற்றுமை தமிழரில் வாழுமா?
சிறுத்தைபோல் அன்று; கூற்றமாய்ச் சீறும்
திறத்தினில் அவர்போல் தமிழர் திகழ்வரா?
குருதி ஆற்றினில் குளித்து மூழ்கிடும்
உறுதி நம்மிடை ஒருதுளி இருக்குமா?
பேச்சுப் பேச்செனப் பேசித் தூவலை
வீச்சு வீச்சென வீசிடும் மறவர்கள் 140
உண்மை விடுதலை உயிர்த்ததிங் கென்றால்
திண்மை குறையாத் திறத்தொடு நிற்பரா?
எனைவகை யால்நாம் தேறியக் கண்ணும்
வினைவகை யால்வே றாகிவிடும் மாந்தர்
பலர் எனக் குறள் மொழி பகர்ந்ததே; யாரை?
சிலர் எனில் முனைந்திடச் சிறிது கருதலாம்!

இன்றோ!
எதற்கெடுத் தாலும் இந்திரா காந்தி
கதவுகள் மூடிக், காதுகள் பொத்தி
ஊமையாய் இருந்திடக் கண்டும் நம்மவர் 150
ஆமையாய் ஒடுங்கி அடங்கிய பின்னரும்,
திண்ணையில் படுத்துத் திராவிடங் கேட்ட
அண்ணாத் துரைகள் அடங்கிய பின்னரும்
'திராவிடம்'போய், 'தமிழ்நாடு'போய், பெரியார்
'இராமருக்குச் செருப்படி' என்ற பின்னரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/60&oldid=1424550" இலிருந்து மீள்விக்கப்பட்டது