பக்கம்:கனிச்சாறு 3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


32  தமிழ் நிலத்தை மீட்பீர்!

என்றெழுவும் தமிழர்படை?
என்றெமது தோள் புடைக்கும்?
இளைஞர்களும் பெண்டிர்களும் எழுந்து வந்தே
ஒன்றிணைவ தெந்தநன்னாள்?
உயர்நிலத்தை மீட்பதெந்நாள்?
உலகம்வாழ் தமிழரெலாம் ஒன்றாய்க் கூடிக்
குன்றனைய பெரும்புகழைக்
குவிப்பதெந்நாள்? - வாழ்வதெந்நாள்?
குவலயத்தார் காண்பதெந்நாள்? - என்றே என்றே
சென்றபல நூற்றாண்டாய்க் கேட்கின்ற தமிழர்களே!
செருமுகத்துக் கெழுந்திடுவீர் இன்றே! இன்றே!

நனவெடுத்த பெருநிகழ்ச்சி! நடத்திடுமெய் வரலாறு!
நடையெடுத்த பெரும்படையின் விடுத லைப்பண்!
தினவெடுத்த பொருதோளீர்!
திறலெடுத்த விறல்மனத்தீர்!
தீந்தமிழின் பகையெங்கே எங்கே என்று
கனவெடுத்த கதையிலெலாம் உரையெடுத்த காளையரீர்!
களிப்பெடுத்த செய்தியிது கேட்பீர்! கேட்பீர்!
தினவெடுத்த கைச்சோற்றை வீசிவிட்டுச் செருமுனைக்குத்
திரண்டுவந்தே தமிழ்நிலத்தை மீட்பீர்! மீட்பீர்!

-1972


33  வேடிக்கையன்று விடுதலை!

கூடிக்கை கொட்டி முழக்கி உரக்கக்
குரல் கொடுத்தே
தேடிக்கை நீட்டித் திசையெலாம் வேண்டித்
தெரிந்ததுணை
நாடிக்கை கோத்துநம் நாடுதா வென்றே
நயந்திரக்க
வேடிக்கை யன்று விடுதலை; வீரர்
விளைப்பதுவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/63&oldid=1424553" இலிருந்து மீள்விக்கப்பட்டது